

'தங்கல்' படத்தின் தமிழ் டப்பிங் பேச இயலாது என்று ரஜினி, அமீர்கானிடம் கூறியுள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தங்கல்'. இப்படத்துக்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டிசம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தனது நெருக்கமான நண்பர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் அமீர்கான். அவர்கள் அப்படம் பற்றிய தங்களுடைய கருத்துகளை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தை ரஜினிக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அப்படம் முடிந்தவுடன் அமீர்கானை வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. "மிகவும் சிறப்பான படம். இந்தளவுக்கு உழைத்திருக்கிறீர்கள். சூப்பராக இருக்கிறது" என்று அமீர்கானிடம் தெரிவித்திருக்கிறார் ரஜினி.
அப்போது அமீர்கான் "இதன் தமிழ் டப்பிங், நீங்கள் பேச முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். "இவ்வளவு நேர்த்தியான படத்துக்கு என்னுடைய குரல் சரியாக இருக்காது. வேறு யாராவது வைத்து பேசச் சொல்லுங்கள்" என்று கூறினார் ரஜினி.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார். '2.0' திரைப்படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.