

'சபாஷ் நாயுடு' படத்தைத் தொடர்ந்து மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கும் 'மெய்யப்பன்' எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'தசாவதாரம்' படத்தில் தோன்றிய பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை வைத்து உருவாகும் படமே 'சபாஷ் நாயுடு'. இதில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக அவரது மகள் ஸ்ருதி ஹாசன், சவுரவ் சுக்லா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதனைத் தொடர்ந்து கமலுக்கு காலில் அடிபட்டதால், அறுவை சிகிச்சை செய்து ஒய்வெடுத்து வருகிறார். ஜனவரி 2017ல் மீண்டும் 'சபாஷ் நாயுடு' பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்நிலையில், மெளலி இயக்கத்தில் கமல் 'மெய்யப்பன்' என்ற தலைப்பில் படம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இது குறித்து விசாரித்த போது, "மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பது உண்மை தான். அதற்கு 'மெய்யப்பன்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், ஏ.வி.எம் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கவில்லை. அதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 'சபாஷ் நாயுடு' முடித்துவிட்டு, அதன் பணிகளை இருவருமே துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முழுக்க காமெடி பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது." என்று தெரிவித்தார்கள்.