

பிரபல சினிமா பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 15 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
எஸ்.பி.பி.யின் பொன்விழா ஆண்டையொட்டி, பிரபலங்கள் பலரும் அவ்வப்போது அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், சுழற் பந்துவீச்சு ஜாம்பவானுமாகிய அனில் கும்ளே, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அவரது வீட்டில் சந்தித்தார்.
அப்போது, பொன்விழா கொண்டாட்டத்தில் தானும் மகிழ்ச்சியைப் பகிரும் விதமாக, எஸ்பிபி-ஐ கேக் வெட்டவைத்து நெகிழ்ந்தார் அனில் கும்ளே. ஆர்.ஸ்ரீதரன், சஞ்சய் பாங்கர் மற்றும் விவிஎஸ் லஷ்மணும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இதைப் புகைப்பட பதிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அனில் கும்ளே, "பொன்னான குரல் வளத்துடன் பாடுவதில் பொன்விழா கண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனும் சகாப்தத்துடனான கொண்டாட்ட தருணம்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.