

‘2.0’ படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கேளம் பாக்கம்-வண்டலூர் சாலையில் உள்ள மேலக்கோட்டையூர் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென்று கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காயமடைந்த ரஜினிகாந்தை படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் முதலான பரிசோதனைகளை நடத்தினர். ஒரு மணி நேர பரிசோதனைக்கு பிறகு ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ரஜினிக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.