

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை கலங்கவைத்த அற்புதமான படைப்பு என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் படம் குறித்து நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நவம்பர் 30-ம் தேதி ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்கிற காவியம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. அந்தப் படத்தில் நான் மாதவ படையாட்சி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாக அனைவரும் கூறுவர். அதை வாழவைத்து தங்கர் பச்சான். இது அவர் எழுதிய கதையல்ல. அவருக்குள் ஊறிய கதை. அவர் கண்முன் நடந்த கதையை கூறினால் எப்படியிருக்கும், அப்படித்தான் படமும். படம் பார்த்த உணர்வு இருக்காது; நிகழ்வுகளை ஓரமாக நின்று வேடிக்கைப்பார்த்த உணர்வு இருக்கும்.
பரத்வாஜின் அற்புதமான இசை. வைரமுத்துவின் வைர வரிகள். அர்ச்சனா, நாசர், ரோகினி சிறப்பாக நடித்திருப்பர். இப்படியான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது பாக்கியம். பொதுவாக நான் நடித்த படங்களை கலைஞர் கருணாநிதி பார்த்து நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார். இந்தப் படத்தை பார்த்து கலைஞர் எழுந்திருக்காமல் உட்கார்ந்தேயிருந்தார். அவர் அருகில் நின்றேன். அமைதியாக இருந்தார்.
என் கையைப்பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர். நானும் கலங்கிவிட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்; ‘என்னை அழ வைச்சுட்டியே’ என கட்டியணைத்தார். தங்கர் பச்சானை கட்டியணைத்து பாராட்டினார். இப்படியான கலைஞரை நான் பார்த்தில்லை. அவரின் சொல் வளம் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கலைஞரை கலங்க வைத்த படம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’. தங்கர் பச்சானுக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.