Published : 29 Nov 2022 09:15 PM
Last Updated : 29 Nov 2022 09:15 PM

இளையராஜாவுடன் இசையிரவு 20 | ‘மௌனமான நேரம்...’ - தனிமையோடு பேசும் கனவு கண்டு கூசும் காதல்!

கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே இசைஞானி இளையராஜாவின் மேஸ்ட்ரோ டச் கொண்டவை. அதிலும் குறிப்பாக, 'மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்' பாடல் ராஜாவின் ராஜகீதம். இந்தப் பாடலும், இளையராஜா - கவிஞர் வைரமுத்து காம்போவில் பிறந்த ஒரு கிளாசிக்கல் ஹிட் ரகம். பாடலை எஸ்பிபியுடன் இணைந்து ஜானகி அம்மா பாடியிருப்பார். பாடலை ஆஆஆஆஆஆஆ என்ற ஹம்மிங் உடன் ஜானகி அம்மா ஆரம்பித்து, மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம் என்று மெல்லியக் குரலில் பாடியிருப்பார். ஒரு மவுனம், நிசப்தம், அமைதி, பேரமைதி அத்தனையும் அந்த வரிகளைப் பாடும்போது பாடல் கேட்பவர்களுக்கு அழகாக கடத்தியிருப்பார்.

புதுமணத் தம்பதிகளை உள்ளனுப்பி தாழிட்டபோது உரசிக் கொண்ட அவர்களது கைப்பட்டு இறுகிப் போயின கதவுகள். அவள் வரும்பாதை என்பதையறிந்தே, தெரியாமல் அவ்வழியே செல்வது போல பாவனைக் காட்டியது அவனது கால்கள். அவள் கண்கண்ட மறுகணத்தில் அவனோடச் சேர்ந்தே மண்ணில் கவிழ்கிறது அவன் மனது. பதறி, சிதறியபடி பாதி வழியில் கால்கள் வேறு திசை நோக்கி நகர்ந்தாலும், அவளைப் பார்த்த இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறது அவனது கண்கள். இருளில் தட்டித்தடவிப் பார்பப்து போல கலை வண்ணத் தேரின் சக்கரத்தின் அச்சைப்பிடித்து ஆசுவாசப்பட்டுக் கொள்கிறது அலைபாய்ந்த மனது. நிலைநின்ற தேரின் ஓரமாய் அவனமர்ந்த நேரத்தில் வந்து சேர்ந்த அவளும் அதையேச் செய்து தோற்றுப்போகிறாள். அக்கணத்தில் இருவரும் பரிமாறிக் கொண்ட பார்வை பரிமாற்றத்தில், உயிர் பெற்ற கல் தேர் அவர்களைச் சுற்றி உலா வருகிறது என்பதைப் போல, பாடலின் தொடக்க இசைக்கும், பல்லவிக்கான காட்சிகளும் விரிந்திருக்கும். பாடலின் பல்லவியை,

"மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்" தனக்கே உரிய புதுக்கவிதைப் போல் புனைந்திருப்பார். கவிதைப் போன்ற அமைதியைக் குலைக்க விரும்பாத இசைஞானி கிடார், கீபோர்ட், புல்லாங்குழல் போன்ற சொற்பமான கருவிகளை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்.

அவளது கூர்தீட்டிய பார்வையால், அதுவரை அவனறிந்திருந்த எல்லாமே தலைகீழாகிறது. கதவை திறப்பதும்கூட அவனுக்கு மறந்தப்போகிறது. செல்போன் அலைவரிசைப் போல வளைந்திருந்த அவளது மைத்தீட்டிய புருவ வளைவுகளின் வீச்சில் இறுக்கிக் கொண்ட கதவுகளைப் போலாகிறது அவன் மனது. ஒருவழியாக கதவைத் திறந்து வீட்டினுள் செல்லும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கிறது நிழல். மாடிப்பாடிகள் மீதேறும் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று, அவனது வரவா என்ற கண்வழி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அவளது நிழல் மட்டும் அங்கேயே நின்றுவிடுகிறது. அவனது ஸ்பரிசத்தின் தகிப்புத் தலையேற, வெப்பத்தில் கொதிக்கிறது குளியலறை. உலை நெருப்பில் தணல்பட்டு உருகி கரைந்த சோப்பின் நுரையெங்கும் வீசி மணக்கிறது அவன் வாசம். காதல் சூழ் குளியலைறயில் அவனது நினைவுகள் முழுவதையும் மேனியெங்கும் பூசி மகிழ்கிறது அவள் மனம் என்ற வகையில் பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசை மற்றும் முதல் சரணத்துக்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். முதல் சரணத்துக்கான வரிகளை கவிஞர் வைரமுத்து,

"இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி" என்று தட்டித் தூக்கியிருப்பார்.

அவன் காதலும், வாசமும் கண்மறைக்க, கைதேடிச் சென்று கண்டடைந்த குழாயிலருந்து பனிப்போலத் தூவுகிறது அவன் குறித்த விருப்பங்கள். குளிர்ந்த நீரில் கொதித்த அவளது காதல் நினைவுகளால் உடல் நனைய, மூழ்கிப்போகிறது அவள் மனது. ஈரத்தலையை காயவைக்க வந்தபோது, காதலால் கொதித்துப் பளபளக்கிறது நிலா. காயும் நிலாச்சூட்டின் உஷ்ணத்தில் அவள் வீட்டு மாடியில் இரவில் தோன்றிய கானல்நீர் அவள் கூந்தலழகை பிரதிபலித்தது. மயங்கிப் போனவள் மனம் லயித்துக் கிடக்கையில், காற்றிலும் கமழ்ந்து நறுமணக்கிறது அவனது வாசனை. மயக்கம்போக சரிந்து சாய்ந்தவள் கண்களை மூடினாள். இமைகளுக்குள் ஓட்டியிருந்த அவனது முகம் மீண்டும் நினைவுக்குவர மெல்லியப் புன்னகையோடு விழித்துக் கொண்டே தூங்க முயற்சிக்கிறாள் அவள் என்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையும் இரண்டாவது சரணமும். இதற்கான வரிகள்,

"இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலென்ன நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ" என்று எழுதப்பட்டிருக்கும். இந்தப் பாடல் முழுவதும் ஒரு பெண் தனக்குள் ஏற்பட்டுள்ள வெளியே சொல்ல முடியாத தவிப்புகளைக் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், ஜானகி அம்மாவின் பாடல் முழுவதுமே ஆதிக்கம் செலுத்தியிருப்பார். ஆனால், இரண்டாவது சரணத்தின் கடைசி வரியைப் பாடும்போது, தனது சிக்னேச்சர் ஸ்டைல் ஸ்மைலில் ஒட்டுமொத்த பாடலையும் கொள்ளைக் கொண்டுவிடுவார் எஸ்பிபி. ராகதேவனின் தேவகானங்கள் தொடர்ந்து மவுனங்களைக் கலைக்கும்....

மௌனமான நேரம் பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 19 | ‘மெட்டி ஒலி காற்றோடு...’ - பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும்!

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x