

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘மாமன்னன்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி ‘மாமன்னன்’ படக்குழு சார்பில் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின் கையில் தீப்பந்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறார். அத்துடன் வீடியோ நிறைவடைகிறது.