சிங்கள ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அழுதுவிட்டார் - சல்லியர்கள் பட பகிர்வுகள்

 சிங்கள ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்தவர் அழுதுவிட்டார் - சல்லியர்கள் பட பகிர்வுகள்
Updated on
1 min read

கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “உண்மைக்கு நெருக்கமான இந்த நிகழ்வுகளை சினிமாவாக எடுக்க தைரியம் வேண்டும். அதை பணம் போட்டு தயாரிக்க இன்னும் அதிக தைரியம் வேண்டும்.. சவாலான இந்த விஷயத்தை இயக்குநர் கிட்டு, கருணாஸ் இருவரும் இணைந்து சாதித்துள்ளனர். மேதகு படத்திற்கு பிறகு இந்த படத்தில் கிட்டு நிறைய இம்ப்ரூவ் பண்ணியிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னணி இசை ரொம்பவே அழுத்தமாக அமைந்துள்ளது” என்று வாழ்த்தினார்.

‘அசுரன்’ படத்தில் ஒரு அறிமுக நடிகராக அனைவரையும் கவர்ந்த கருணாஸின் மகன் கென் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவர் பேசும்போது, “என்னுடைய நண்பர் ஈஸ்வர் தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர். நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன். இந்த ‘சல்லியர்கள்’ படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதை புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இயக்குநர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம். இந்தப்படத்தில் நடிகர் திருமுருகன் சிங்கள ராணுவ வீரனாக வில்லனாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஒரு காட்சியை அவருக்கு திரையிட்டு காட்டியதும் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டார்” என்று கூறினார்.

கென்னின் நண்பரும் இசையமைப்பாளருமான ஈஸ்வர் பேசும்போது, “எனக்கு இசையமைப்பதில்தான் நாட்டம் அதிகம் என்பது கென்னுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதற்கு தொடர்பில்லாமல் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்தப்படத்தில் இசையமைக்க வரச்சொன்னார். என்னை இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய கருணாஸ் அங்கிள் மற்றும் இயக்குனர் கிட்டு இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in