

பொங்கல் பண்டியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் நடிகை மஞ்சு வாரியார் நாயகியாக நடித்துள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “அஜித்தின் ‘துணிவு’ படத்தில் சுவாரஸ்யமான இந்தப் பாடலில் நானும் பாடியிருப்பது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நடிகர் சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘துணிவு பரபரப்பாக..’ என கேப்ஷனிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.