Last Updated : 25 Nov, 2022 06:35 PM

Published : 25 Nov 2022 06:35 PM
Last Updated : 25 Nov 2022 06:35 PM

பட்டத்து அரசன் Review - கபடியும் கபடி நிமித்தமும், கிட்டாத சுவாரஸ்யமும்!

கபடியின் வழியே ஒரு குடும்பக்கதையை கிராமத்து வாசனையுடன் சொல்லியிருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. காளையார் கோயில் எனும் கிராமத்தின் அசுர கபடி ஆட்டக்காரர் பொத்தாரி (ராஜ்கிரண்). அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு ஊருக்காக கபடி போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை குவித்தவர். அவருக்குப் பிறகு அவரது மகன், பேரன் என 40-50 ஆண்டுகளாக ஊருக்காக கபடி விளையாடி பெருமை சேர்த்தவர்கள். இப்படியான சூழலில், ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்துவிட்டதாக அவர் மீது பழி விழ, அதனை துடைக்கும் பொறுப்பை ஏற்று களமிறங்குகிறார் சின்னதுரை (அதர்வா).

இறுதியில் அந்தக் குடும்பத்தின் மீதான பழியை அவர் துடைத்தாரா, இல்லையா என்பதுடன், ஒதுங்கியிருந்த தனது தாத்தா குடும்பத்துடன் அவர் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தார் என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ சொல்லும் திரைக்கதை.

கிராமத்து குடும்பக் கதையை அதன் மணம் மாறாமல் திரையில் பரிமாற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். உடன் கபடியை களமாக்கியிருக்கிறார். மண்சார்ந்த படைப்புகளில் தேர்ந்த அவர், வெற்றிலை விவசாயம், ஊர்மக்களின் கலாசாரம், கதாபாத்திரங்களின் பெயர்கள் முதற்கொண்டு கிராமத்து நெடியை தூவியிருக்கிறார். எந்த வகையிலும் அந்நியப்படாத அதர்வாவின் உடல்மொழியும், மீசையும், கம்பீரமான நடையும் அசலுக்கான அங்கீகாரத்தை தருகிறது. ஆக்ரோஷத்துடன் களமிறங்கும் கபடிக் காட்சிகள் ஈர்க்கின்றன.

மூத்த கபடி ஆட்டக்காரரான ராஜ்கிரண், நீளமான தாடியுடன் கிராமத்து கதைகளுக்காகவே அளவெடுத்து செய்த தோற்றத்தில் பக்காவாக பொருந்திப்போகிறார். அவமானப்பட்டு கூனிக் குறுகும்போதும், இறுதிக் காட்சியில் சீறிப்பாயும்போதும் இரு வேறு எல்லைகளிலும்தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை பதியவைக்கிறார். கதாபாத்திரத்துக்கான அவரின் நடிப்பு திரையில் பிரதிபலிக்கிறது. துணைக் கதாபாத்திரங்களாக ராஜ் அய்யப்பா, ராதிகா, ஜெயப்பிரகாஷ் சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன் தேர்வு கச்சிதம். நாயகி ஆஷீகா ரங்கநாதன் காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டும் தலைக்காட்டிச் செல்கிறார். இறுதியில் அவர் ஸ்கோர் செய்யும் சில காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரம்.

வழக்கமான கிராமத்து குடும்பக் கதையை மீண்டும் படமாக்கி, அதில் கபடியை நுழைத்திருப்பது பெரிய அளவில் சுவாரஸ்யத்தை கூட்டவில்லை. பிரிந்த குடும்பத்துடன் சேர முற்படும் நாயகன் டெம்ப்ளேட் பாத்திரம் சோர்வு. அண்மையில் வெளியான ஹரியின் ‘யானை’ படமும் கூட இதே பாணிதான். படத்தின் அடிநாதமான சென்டிமென்ட் காட்சிகள் க்ளைமாக்ஸில் மட்டும் ஒட்டுகின்றன. தவிர, அதற்கு முன்புவரை பெரிய அளவில் அவை பார்வையாளர்களை பாதிக்கவில்லை. எளிதில் கணிக்கக்கூடிய, பார்த்து பழகிய காட்சிகள், தேவையில்லாத இடைச்செருகலான காதல், பாடல்கள் ஆகியவை திரைக்கதையில் வறட்சியை கூட்டுகின்றன. ’உங்க ஊரில் ஆம்பளைங்க இருக்காங்களா?’ போன்ற பிற்போக்குத்தனமான காட்சிகள் நெருடல்.

ஜிப்ரானின் பின்னணி இசைக்கோர்ப்பு காட்சிகளுக்கான தரமான வார்ப்பு. லோகநாதன் ஒளிப்பதிவில் கபடி ஆட்டங்கள் களைக்கட்டுகின்றன. குறிப்பாக அதர்வா பயிற்சி எடுக்கும் காட்சி நினைவில் நிற்கும் ப்ரேம். அளந்துவெட்டிய ராஜா முகமது படத்தொகுப்பு கச்சிதம். தொழில்நுட்பம் கைகொடுத்தாலும், ப்ரோ கபடியில் தேர்வான வீரனை அசால்ட்டாக வெற்றிகொள்வது, அனுபவம் கொண்ட கபடிக்குழுவை அனுபவமில்லாதவர்கள் எதிர்கொண்டு வெல்வது, அனல் பறக்கும் கபடிக்களத்தில் கல்யாணம் செய்வது என தர்க்கங்கள் படம் பார்த்தபின்பும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

மொத்தத்தில் புதுமையில்லாத வழக்கமான கதை, பார்த்துப் பழகிய காட்சிகள், தர்க்கப் பிழைகளைக்கொண்டு உருவாகியிருக்கும் ‘பட்டத்து அரசன்’ அதற்கான திரை ஆட்சியில் சோபித்திருக்கிறானா என்பது சந்தேகமே!

தவறவிடாதீர்!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x