

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழக தலைவர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் ரஜினி.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர் மற்றும் இந்தியத் திரையுலகினர் பலரும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவற்றின் தொகுப்பு இதோ:
பிரதமர் நரேந்திர மோடி: பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த். நீண்ட ஆயுளுடனும், உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்
திமுக பொருளாளர் ஸ்டாலின்: ரஜினிகாந்த் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், மேலும் பல சாதனைகளை திரையுலகில் நிகழ்த்தி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்கவும் மனமார வாழ்த்துகிறேன்
தமிழிசை செளந்தராஜன்: தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்தநாளைக் கொண்டாடுவது இன்றைய சூழலில் தவிர்க்க வேண்டும் என்று தாங்கள் அறிவித்திருப்பது தவிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களோடு தங்கள் உணர்வுகளை ஒன்றுபடுத்தியிருக்கிறீர்கள். தாங்கள் எல்லா நலனும் பெற்று, உடல் ஆரோக்கியத்தோடு கலை சேவையும், சமூக சேவையும் ஆற்ற வேண்டும் என்று தங்களின் இந்த பிறந்த நாளில் இறைவனைப் பிராத்திருக்கிறேன். தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாண்டிராஜ்: எங்க அப்பாவுக்கும் பிடித்தவர்! எனக்கும் பிடித்தவர்!! என் பையனுக்கும் பிடித்தவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி சார்.
இயக்குநர் ரஞ்சித்: பிறந்தநாள் வாழ்த்துகள் சார். உங்கள் அன்பிலும், அரவணைப்பிலும் நான். பெரும் மகிழ்ச்சி.
பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி: ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்நாள் முழுவதும் நல்ல உடல்நலத்துடனும், வெற்றியுடன் வாழ வேண்டுகிறேன்.
அமிதாப் பச்சன்: ரஜினிகாந்த் பிறந்தநாள். நல்ல உடல்நலத்துடன் சந்தோஷமாக வாழ்த்துகிறேன்.
வீரேந்தர் சேவாக்: எப்போதுமே ரஜினிகாந்த் ஒருவர் தான். இந்தியாவின் அனைவராலும் விரும்பப்படுகிற நடிகர். பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.
ஷாருக்கான்: எங்கள் அனைவரை காட்டிலும் இயல்பும் சிறப்பும் மிக்கவரே, உங்களுக்கு உடல் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துகிறேன். எங்களை இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வியுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!
தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைத்தளத்தில் பதிந்த வண்ணம் உள்ளனர். இவற்றில் ரஜினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.