

ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மன்னன்' திரைப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது.
பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிவலிங்கா'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இசை மற்றும் ட்ரெய்லரையும், ஜனவரி 26ம் தேதி படத்தையும் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் ரஜினி நடிக்க, பி.வாசு இயக்கத்தில் வெளியான 'மன்னன்' படத்தின் ரீமேக்காகும்.
ரஜினியோடு நடித்த கவுண்டமணி வேடத்தில், வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். 'சிவலிங்கா' படத்தைத் தொடர்ந்து, இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பி.வாசு.
குஷ்பு, விஜயசாந்தி உள்ளிட்டோர் வேடங்களில் யார் நடிக்கவிருக்கிறார்கள் உள்ளிட்டவற்றை படக்குழு விரைவில் அறிவிக்க தீர்மானித்துள்ளார்கள்.