

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வந்த 'முடிசூடா மன்னன்' படத்தின் தலைப்பு 'சத்ரியன்' என மாற்றப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் 'முடிசூடா மன்னன்'. யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு 'சத்ரியன்' என மாற்றப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் 'சத்ரியன்'. விஜயகாந்த் நாயகனாக நடித்த இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.
அப்படத்தை தயாரித்த ஆலயம் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி வாங்கி, 'சத்ரியன்' என தலைப்பை மாற்றியிருக்கிறது படக்குழு. பெயர் மாற்றம் குறித்து இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் "'முடிசூடா மன்னன்' பெயரை 'சத்ரியன்' என மாற்றியிருக்கிறோம்.
புத்தாண்டு அன்று அறிவிக்க திட்டமிட்டு இருந்தோம். பலரும் பெயர் மாற்றம் உண்மைத் தானா என கேட்கிறார்கள். ஆம்.. உண்மைத் தான்" என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.