'இரண்டு நாள் கழித்தே என் காதலை மஞ்சிமா ஏற்றுக்கொண்டார்' - மனம் திறந்த கவுதம் கார்த்திக்

'இரண்டு நாள் கழித்தே என் காதலை மஞ்சிமா ஏற்றுக்கொண்டார்' - மனம் திறந்த கவுதம் கார்த்திக்
Updated on
1 min read

நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் வரும் 28ம் தேதி இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். இருவரும் தங்கள் காதலை சமீபத்தில், சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். தொடர்ந்து திருமண தேதி அறிவிக்கப்பட்டது. திருமணத்தில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே, கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கவுதம், "மஞ்சிமாவும் நானும் இல்லற வாழ்க்கையில் இணைய போகிறோம். திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை.

எங்கள் காதல் பெரிய கதையெல்லாம் இல்லை. நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் புரோபோஸ் செய்தேன். அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கொண்டு எனது காதலை ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளது. எங்கள் இரு குடும்பமும் நாங்கள் இணைவதில் சந்தோசமாக உள்ளனர்.

'நீ ஒரு சரியான நபரை சந்திக்கும் போது அவர் உன்னை உண்மையான மனிதனாக்குவார்' என்று என் தந்தை எப்போதும் கூறுவார். மஞ்சிமா அப்படிப்பட்ட ஒரு நபர் எனக்கு. என்னை ஒரு மனிதனாக மாற்றியவர் அவர். மஞ்சிமா அழகானவர் மட்டுமல்ல, வலிமையான பெண்ணும்கூட. நான் எப்போது பலவீனமாக இருந்தாலும், என்னை அதிலிருந்து தூக்கிவிடுவது அவர்தான். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்தே நாங்கள் காதலித்தோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மஞ்சிமா பேசுகையில், "வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வரும்போது எப்போதும் ஒரு பயம் இருக்கும். ஆனால், முதல் நாள் முதல் படத்தில் இருந்து அன்பும் ஆதரவும் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இப்போது இது அடுத்தகட்டத்துக்கு செல்லும்போது அந்த ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in