

இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களில், பெண் பாடகர்கள் பலரும் காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை பாடியுள்ளனர். அந்த வரிசையில் இந்திய அளவில் தனது தெய்வீக குரலால் பலரது மனங்களை ஈர்த்தவர் வாணி ஜெயராம். இசை ஞானியாரின் இசையில் அவரும் பல பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் இந்தப் பாடலும் கடல் கடந்து வாழும் கோடிக்கணக்கான தமிழ் இசை ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமான நாஸ்டால்ஜி பெட்டகத்தின் பொக்கிஷப் புதையல்.
கடந்த 1979-ம் ஆண்டு இயக்குநர் தேவராஜ் -மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்' பாடல்தான் அது. பாடலை இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் எழுதியிருப்பார். கங்கை அமரன் தனது எழுத்தின் மூலம் முத்திரைப் பதித்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மூத்த பாடகி வாணி ஜெயராம் பாடியிருப்பார்.
காதலிலும் யுத்தத்திலும் மீறலென்ற எந்த வரையறையும் இருப்பதே இல்லை. அதிசயங்கள் நிறைந்த அவள் குறித்த நினைவுகளின் தேக்கத்தில் அவனைப் போலவே கூவுவதை மறந்திருந்தது சேவல். இலகுவான எடையுடைய எப்போதும் எச்சரிக்கையுணர்வுடன் இருக்கும் பெட்டை கூவ மறந்த சேவலைத் தேற்ற வருகிறது. வந்த இடத்தில் ஒன்றையொன்று பார்வையால் ஈர்த்து நிற்கின்றன. நீலம் போர்த்திய வானம் பார்த்திருக்க, வேறு யாரும் பார்த்துவிடுவதற்குள் அந்த இடத்தை வேகமாய் கடக்கும் வாகனத்தின் பின்னமர்ந்திருந்த அவளோடு சேர்ந்து பயணிக்கிறது காதல். திறந்து கிடந்த வானமும், உயர்ந்த நின்ற மரங்களும் கிசுகிசுத்துப் பேசிக்கொள்ள ஒழுங்கற்ற பாதைகளில் உருண்டோடி உரசிக் கொள்கிறது காதல்.
சமூக ஊடகங்களில் புதிதாக பதிவிட்ட போஸ்ட்டுக்கு மெல்ல மெல்ல வரும் லைக்கும், ஹார்டினும் தரும் ரகசியப் புன்னகை போலத்தான், இந்தப் பாடலின் தொடக்க இசையை கிடாரிலிருந்து மென்மையை விட மிருதுவாக தொடங்கியிருப்பார் இசைஞானி. நேரம் செல்ல செல்ல, அந்த போஸ்ட்க்கு வரும் நூற்றுக்கணக்கான ரெஸ்பான்ஸ்களின் போது ஏற்படும் ஆனந்த துள்ளல் போலத்தான், கிடாருடன் வந்து சேர்ந்திருக்கும் அந்த வயலின்கள், எமோஜிகளை கூடையில் அள்ளி மேலே கொட்டியது போல், வயலின்களுடன் பெல்ஸ் சேரும்போது, வரும் புல்லாங்குழல் இசை, ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஹார்டின்களையும் மனசெல்லாம் அப்பிக்கொண்டது போலத்தான் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலின் பல்லவியை,
"என்னுள்ளில் எங்கோ
ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று மிக மென்மையான வார்த்தைகளைக் கொண்டு கங்கை அமரன் எழுதியிருப்பார்.
நிர்பந்தங்கள் ஏதுமின்றி நீண்டு செல்லும் பயணத்தில் அவளோடு கனத்த மவுனத்துடன் கலந்திருக்கிறது காதல். கடந்து செல்கின்ற மரங்களும், செடிகளும், குடிசைகளும், வீடுகளும் அவளைத்தான் பார்க்கிறதென்ற அச்ச உணர்வை அசைத்து சரி செய்கிறது பாதை. மண்சாலைகளைக் கடந்து மேடேறும் திருப்பங்களில் அனிச்சையாய் அவன் இடையணைத்து தோள் சாயும் அவளது காதலில் ஆட்சேபனைகள் எதுவும் இருக்கவில்லை என்பதுபோலத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
முதல் சரணத்துக்கு முன் வரும் அந்த இடையிசையும் இதேபோலத்தான், வயலின்களின் வசீகரத்தோடு லேசாக தொடங்கி சென்றுகொண்டிருக்கும். அத்தருணத்தில் வரும் ஒரு சின்ன இடைவெளிக்குள் வரும் புல்லாங்குழலின் இசை பாடல் கேட்பவர்கள் அத்தனை பேரையும் மயக்கத்தில் ஆழ்த்தி தலையாட்ட வைத்துவிடும். அதன்பின் மீண்டும் வயலின் கொண்டே மயக்கத்தில் இருந்த நம்மை தெளிய வைத்திருப்பார் இசைஞானி.
யாரும் பார்த்திருக்கவில்லையென அவர்கள் திருப்தியுறும் நேரத்தில், இருசக்கர வாகனத்தின் கண்ணாடி வழியே வந்து சிரிக்கிறது வானம். தார் சாலையைப் பிடித்து தப்பிக்க நினைக்கும் தருணத்தில், வானத்தைப் போலவே நிலம்தோறும் பரவிக்கிடக்கும் அழகான மலைத்தொடரின் வனப்பு அவர்களை வரவேற்று மகிழ்கிறது. தூரத்தில் தெரியும் அந்த அழகான இடத்திற்கு செல்ல அவள் மறுக்காமல் சென்றதால், வழக்கமாக அழகாக மட்டுமே இருக்கும் அவ்விடம் அவளது வரவால் இன்னும் அழகாகிவிடுகிறது அவனுக்கு... என காட்சிகளை சீர்பிரித்து காட்டியிருக்கும் ராகதேவனின் இசை. பாடலின் முதல் சரணம்,
"என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
ஆஆ …ஆஆ.ஆஆஅஆஆ
பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்
போதையிலே மனம்
பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே சேராதோ" என்று எழுதப்பட்டிருக்கும்.
அவன் கைநீட்டி விவரிக்க அவளோடு சேர்ந்து நீலக்கூரையும் பச்சை மலை முகடுகளும் நேசத்தைப் பரிமாறிக் கொள்கின்றன. அவ்விடத்தில் அந்நியர்களின் வருகையால் நிசப்தம் கொள்கிறது காற்று. அருகருகே இருக்கும்போது அழகாகி, அனலாகிறது காதல். காதலின் வெக்கை வேர் விரிந்த மரத்தை நிழல் மறக்கச் செய்துவிடுகிறது. நேருக்கு நேர் பரிமாறக் கொண்ட பார்வையின் அர்த்தம் புரிந்து வந்த வெட்க சிரிப்பில் சிவந்து பூத்தன சாமாந்திப் பூக்கள் என்பது போல் காட்சிகள் விரிந்திருக்கும்.
இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையும், மழைக்காலங்களில் பொழியும் பனிச் சாரலைப் போல, வயலின்களும், மற்ற இசைக்கருவிகளும் சேர்ந்து நம்மை உருக வைத்திருக்கும். அதனைத் தொடர்ந்து தபேலாவுடன் சேரும் வீணை உருகி நின்ற நம் மனங்களை உறைய வைத்திருக்கும்.
இந்தப் பாடல் முழுவதும் பல இசைக்கருவிகளை ராகதேவன் இளையராஜா பயன்படுத்தியிருந்தாலும், பாடலில் வாசிக்கப்படும் தபேலாவின் வாசிப்பு முறை நம் நெஞ்சங்களிலிருந்து என்றுமே நீங்காதவை. இசைஞானியிடம் வெகு காலமாக தபேலா இசைக் கலைஞராக இருந்தவர்களில் மூத்த இசைக் கலைஞர்கள் ஐயா கண்ணையா மற்றும் பிரசாத் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருமே இறைவனடி சேர்ந்துவிட்டாலும், இசைஞானி இளையராஜாவின் இசையில் இவர்கள் நாதத்தில் உருவான பாடல்கள் என்றும் நம்மோடு வாழ்ந்து வருபவை. இரண்டாவது சரணத்தை,
"மஞ்சளைப் பூசிய மேகங்களே
மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே
ஆஆ …ஆஆ.ஆஆஅஆஆ.
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து
காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ" என்று ஆழமான காதலின் அதீதத்தை சொல்லில் வார்த்திருப்பார் கங்கை அமரன்.
இருவருக்குமான குறைவான இடைவெளி முழுவதையும் இறுகப் பற்றி நிரப்பிக் கொண்டிருந்தது காற்று. அவனோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் அவளுக்கு நேரங்காலம் தெரிந்திருப்பது இல்லை. வெளிச்சம் குறைய குறைய அதிகரிக்கத் தொடங்குகிறது காதல். தெரியாத பாதையில் நடக்கிறோம் என்பது தெரிந்து வேகம் கொள்ளும் அவளுக்கு நன்றாகத் தெரியும், தடுக்கினால் அவன் தாங்கிக் கொள்வான் என்று. அவள் மீதான அவனது காதலின் கனத்தை அறிந்துகொள்ள தடுக்கி விழுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை. இம்முறை அவளது தவிப்புடன் கூடிய வெட்கம் கத்தரிப்பூ நீலத்தில் சிரிக்கிறது.
அவன் கரம்பிடித்தபடி நகரும் அவளது காதலால் ஆசை தீப்பற்றிக் கொண்ட வான்மேகங்கள் மஞ்சள் பூசி மகிழ்கின்றன. புனிததன்மையை காக்க மறைவிடங்களுக்குள் மறைந்து கொள்ளும் எல்லா காதலைப் போலவும் இவர்களது காதலும் சஞ்சாரம் கொள்கிறது. ராஜாவின் ராஜகீதம் நாளும் கேட்கும்...