

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்னும் தீராததால், சூர்யாவின் 'சி3' திரைப்படம், டிசம்பர் 16-ம் தேதியிலிருந்து டிசம்பர் 23ம் தேதிக்கு வெளியீட்டை மாற்றியிருக்கிறது.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சி3'. ஹரி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தணிக்கைக்கு விண்ணப்பிக்க, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சினை இன்னும் தீராத நிலையில், 'சி 3' திரைப்படம் தங்களுடைய வெளியீட்டை டிசம்பர் 23ம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள். "ரூபாய் நோட்டு பிரச்சினை நகரங்களில் ஓரளவு தீர்ந்துவிட்டாலும், கிராமங்களில் இன்னும் இப்பிரச்சினை நிலவுகிறது.
அதனால் தான் ஒருவாரம் படத்தின் வெளியீட்டை தள்ளியிருக்கிறோம்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
'சி 3' படத்தில் தனது பணிகள் முடிவடைந்ததால், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.