

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'தனி ஒருவன்' படத்தில் முக்கிய வேடத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தனி ஒருவன்'. ஜெயம் ராஜா இயக்கி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் பின்னி மில்லில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
"'தனி ஒருவன்' படக்குழுவில் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார் என்று அறிவிப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் வில்லன் யார் என்று தெரியாத நிலையில், அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி இருப்பதால் அவர் வில்லனாக தான் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.