

மேற்குவங்க நடிகை ஐந்த்ரிலா ஷர்மா மாரடைப்பால் இன்று காலமானார். 24 வயதேயான அவர் உயிரிழந்தது திரையுரலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வங்காள மொழியில் வெளியான ‘பாகர்’ இணையத்தொடரில் நடித்திருந்தார் ஐந்த்ரிலா ஷர்மா. மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர், ஜூமுர் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர், ‘அமி திதி நம்பர்1’, ‘லவ் கஃபே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ‘மகாபீத் தாராபீத்’, ‘ஜிபோன் ஜோதி’ போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
பிரபல நடிகையாக வலம் வந்த ஐந்த்ரிலா ஷர்மா புற்றுநோய் பாதிப்பிலிருந்து 2 முறை மீண்டு வந்தவர். கடந்த நவம்பர் 1-ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மண்டையோட்டில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு நேற்று இரவு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமாகியது. பின்னர் அவருக்கு சிஆர்பி கொடுக்கப்பட்டு பலனளிக்காமல் ஐந்த்ரிலா ஷர்மா உயிரிழந்துள்ளார்.