

பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசுகிறார். நிர்வாகிகளுக்கு மதிய உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பான பிரச்னை ஒருபுறம் தீவிரமெடுத்துள்ள சூழலில், நடிகர் விஜய் இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசிவருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை இன்று விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்வார் எனவும், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகள் மட்டுமே அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை . மேலும், ரசிகர்களுக்கு மதிய உணவாக பிரியாணியும் வழங்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரசிகர்களை விஜய் மீண்டும் சந்திப்பதால், பனையூர் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது.