

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அண்மையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அறிவிப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து துருவ் விக்ரம் நடிக்கும் படமாக இது இருக்கும் எனவும், டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.