Published : 20 Nov 2022 07:38 AM
Last Updated : 20 Nov 2022 07:38 AM

கலகத் தலைவன்: திரை விமர்சனம்

கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் திருமாறன் (உதயநிதி). அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனம் ஒன்றைத் தயாரிக்கிறது அந்நிறுவனம். ஆனால், அதிலிருந்து வெளியேறும் மாசு, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி இருக்கிறது. விஷயம் வெளியே கசிந்தால், தொழில் பாதிக்கும் என்பதால் ரகசியமாக வைக்கிறார்கள். ஆனால், வெளியில் கசிந்துவிடும் அந்த ரகசியம் பங்கு சந்தையில் எதிரொலிக்கிறது. தனது நிறுவன ரகசியத்தை வெளியே விட்டது யார் என்பதை கண்டுபிடிக்க அர்ஜுனை (ஆதவ்) நியமிக்கிறது அந்த நிறுவனம். அவர் எப்படி கண்டுபிடிக்கிறார், அதில் நாயகன் சிக்கினாரா, அவர் ஏன் அதைச் செய்தார் என்பது படம்.

எங்கோ ஒர் இடத்தில் கார்ப்பரேட் செய்யும் ஒரு விஷயம் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும் கார்ப்பரேட்களின் அரசியலையும் புரியும்படி சொல்லி இருக்கிறார், இயக்குநர் மகிழ் திருமேனி. அவருடைய முந்தையப் படங்களைப் போலவே நாயகனுக்கும் அவரைத் தேடும் எதிர்மறை நாயகனுக்குமான பூனை - எலி ஆட்டம் இதிலும் தொடர்கிறது சுவாரஸ்யமாக. அதற்கு, இடைவேளைக்கு முன் வரும் அந்த ‘ரயில்வே ஸ்டேஷன்’ சேஸிங் அபார சாட்சி. அதுதான் இயக்குநர் மகிழின் மேஜிக்கும் கூட. திரைக்கதையில் அவர் பயன்படுத்தி இருக்கும் ‘நான் லீனியர்’ வடிவமும் ரகசியங்கள் ஒவ்வொன்றையும் கதையின் போக்கில் அவிழ்த்துச் செல்வதுமான உத்தி ரசிக்கும்படி இருக்கிறது.

திருமாறனாக உதயநிதி, தனதுமுந்தைய படங்களை விட ஒரு படி உயர்ந்திருக்கிறார். அதற்கு அவருடைய, மிகை நாயக பிம்பமில்லாத கதாபாத்திர வடிவமைப்பும் கதையை மீறாத நடிப்பும் காரணம். பெண்களின் ஹேண்ட்பேக்கை வைத்து அவர்கள் குணாதிசயங்கள் சொல்லும் இடத்திலும் புத்திசாலித்தனமான ஆக்‌ஷன் காட்சிகளிலும் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்.

அவரைக் காதலிக்கும் மருத்துவ மாணவியாக நிதி அகர்வால். உதயநிதிக்கும் அவருக்குமான காதல் காட்சிகள், ‘க்யூட்’. ஆனால், ‘சேஸிங்’திரைக்கதையின் வேகத்தை இரண்டாம் பாதியில் வரும் காதல் எபிசோட், டமாரென குறைத்துவிடுகிறது.

பவர் ஃபுல் வில்லனாக அமர்க்களப்படுத்துகிறார் ஆரவ். அவருடைய, கார்ப்பரேட்டுகளுக்கான கூலிப்படை கேரக்டரே, புதிதாக இருக்கிறது. அவருக்கும் நாயகனுக்குமான ஆட்டம்தான் கதை என்பதால், உணர்ந்து நடித்திருக்கிறார் ஆரவ்.

உதயநிதியின் நண்பராக வரும் கலையரசன், ஜீவா ரவி, ஆரவுக்கு உதவும் அங்கனா ராய் உட்பட அனைத்துத் துணைக் கதா பாத்திரங்களும் சிறப்பானத் தேர்வு. திரைக்கதையின் பரபரப்புக்கு விறுவிறுப்புடன் நம்மையும் இழுத்துச் செல்கிறது, தில்ராஜின் திகட்டாத ஒளிப்பதிவு. அரோல் கரோலியின் இசையில் மதன் கார்க்கி, பிரியனின் இனிமையான பாடல்களும் காந்த் தேவாவின் பின்னணி இசையும்கதையை இன்னும் அழுத்தமாக்குகின்றன.

‘நீங்க ஓட்டுக்கு காசு கொடுக்கறது பத்திதான் பேசறீங்க, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு கேட்டிருக்கீங்களா?’ என்பது போன்ற வசனங்கள் நின்று கவனிக்க வைக்கின்றன.

எளிய மக்களின் நிலங்களை அபகரித்து, அரசியல் அதிகாரங்களுடன் இணைந்து சுற்றுச்சூழலைஅழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வில்லன்கள் எனக் காட்டினாலும் அதை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம் என்பது உட்பட சில குறைகள் இருந்தாலும், ‘கலகத் தலைவன்’ வரவேற்கப்பட வேண்டியவன்தான்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x