

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கில் ‘வரசுடு’ என்றப் பெயரில் மகர சங்ராந்தி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், பொங்கலுக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளிக்க, திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2017ம் ஆண்டு தில் ராஜூ, பிலிம்சேம்பர் துணைத் தலைவராக இருந்தபோது, பண்டிகை காலங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதை நினைவூட்டி தில் ராஜுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்ப பிரச்சனை வெடித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தற்போது தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு ஆகியோர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் லிங்குசாமி இதுதொடர்பாக பேசுகையில், "சங்கராந்திக்கு ‘வாரிசு’ படம் ஆந்திராவில் வெளியாகவில்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமா ‘வாரிசு’க்கு முன், ‘வாரிசு’க்கு பின் என்று ஆகிவிடும். தற்போது சினிமாவின் பொற்காலம். இக்காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனை வரவே கூடாது. இரண்டு சினிமாக்களிலும் நல்ல ஆட்கள் உள்ளனர். அவர்கள் இதுதொடர்பாக பேசி சுமூக முடிவெடுக்க வேண்டும்.
குறுகிய எண்ணங்களோடு சிலர் இருந்தால், அந்த எண்ணங்களை மாற்ற வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. இல்லையென்றால் ‘வாரிசு’க்கு முன்னும் பின்னும் என்று சினிமா மாறிவிடும். இது சிறிய சலசலப்புதான். விரைவில் சரியாகும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.