

சிம்புவையோ அல்லது ஸ்ருதிஹாசனையோ மனதளவில் காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கிடையாது என இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரகாஷ்ராஜ், ஆனந்தி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
இதில் சிம்பு (பீப் பாடல் தொடர்பாக) மற்றும் ஸ்ருதிஹாசன் ('ப்ரேமம்' தெலுங்கு படம் தொடர்பாக) இருவரையும் கிண்டல் செய்து சில காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். இதற்கு அவருடைய ரசிகர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறியிருப்பது, "படத்தின் முதலில் இதில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பிடவில்லை என்று வரும். காமெடிக்காக பண்ணிய விஷயங்கள் தான். சிம்புவையோ அல்லது ஸ்ருதிஹாசனையோ மனதளவில் காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. வாழ்க்கையில் ஒரு விஷயம் நன்றாக இருக்கும் என்று நினைப்போம், அதையும் மீறி மற்றொரு விஷயம் நன்றாக இருக்கும்.
ஸ்ருதிஹாசன் நடித்த 'ப்ரேமம்' நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவங்களுக்கு அங்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. அதனை பாசிட்டிவ்வாக அணுக வேண்டும். யாரையும் சிதைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. இது பகடி செய்து எடுத்த படம் தான். அனைவருமே ரசிக்கிற விஷயமாக தான் பண்ணியிருக்கிறோம். அப்படி யாராவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
பொழுதுபோக்கு அம்சங்களுடம் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. இப்படம் குறித்து வரும் விமர்சனங்களை படித்தேன். அதிலிருக்கும் நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொள்வேன். அனைத்து விமர்சனங்களையும் நான் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், விமர்சனம் பண்ணுவது எளிது. ஒரு படத்துக்காக கதை எழுதி, இயக்குவது கடினம்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.