

'என்னை நோக்கி பாயும் தோட்டா' உருவான விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறார்கள். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய விஷயங்களில் மட்டும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
இப்படம் உருவான விதம் குறித்து கெளதம் மேனன், "'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் 80% முடிந்து வைத்திருந்த கதைதான். என்னிடம் தனுஷும் 2017 இறுதியில் தான் தேதிகள் இருக்கிறது என்றார். ஒ.கே ப்ரதர்... இக்கதையை படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்திருந்தால் இக்கதையில் நான் கொஞ்சம் பணியாற்ற வேண்டும் என்றேன்.
அக்கதையை படித்து முடித்தவுடன் "உடனே படப்பிடிப்புக்குப் போக முடியுமா?" என்று கேட்டார். அதில் நாயகன் வேடத்துக்கு தனுஷ் எப்படியிருப்பார் என்று சிறுசிறு சந்தேகங்கள் எல்லாம் இருந்தது.
ஒரு நாள் நாயகி தேர்வுக்காக டெஸ்ட் ஷூட் வைத்திருந்தேன். அப்போது "ப்ரோ.. ஒரே ஒரு காட்சி மட்டும் தான். உங்களுக்காக இல்லை. நாயகிக்காகதான்" என்றவுடன், "இதில் என்ன இருக்கிறது.. இதோ வருகிறேன்" என்றார். நான் சொன்ன லுக்கில் வந்து நடித்துக் காண்பித்தார். அப்போதே இவர் வேற லெவல் நடிகர் என்று முடிவு செய்துவிட்டேன்.
ஒரு பெண்ணை ஒரு இடத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். அப்புறம் ஒரு அண்ணன் கதாபாத்திரம் இருக்கும். இவர்கள் இருவரையும் தேடும் ஒரு பயணம் தான் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'." என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.