

விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள 2 இந்திப் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் சிறுவயதில் பொம்மை வாங்கக் கூட, தனது பெற்றோர் கஷ்டப்பட்டதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “சிறுவயதில் அதிகம் கஷ்டப்பட்டோம். 2 மாதத்துக்கு ஒரு முறை வீடு மாறிக் கொண்டே இருப்போம். வாடகைக்குப் பணம் இருக்காது. எனக்குப் பொம்மை கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை. சிறு வயதில் இருந்தே போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் மனதளவில், இன்னும் பொம்மை வாங்க முடியாத, அதே குழந்தையாகவே இருக்கிறேன். நடிப்புக்காக எனக்கு கிடைக்கும் சம்பளம், அங்கீகாரம் அனைத்தையும் மதிக்கிறேன். இது நிலையானதல்ல என்பதை அறிந்திருப்பதால், என் சிறுவயது அனுபவங்கள், இந்தச் சாதனைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதைத் தடுக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.