

ரூபாய் நோட்டு உத்திக் குறித்து "தூய்மையான இந்தியாவுக்கு வழிவகுக்கும்" என்று இயக்குநர் வெங்கட்பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய நோட்டு களை வங்கியில் செலுத்தி மாற்றி வருகின்றனர். இதனால் கடந்த ஒருவாரமாக அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திரையுலகிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த மாற்றம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு, "கண்டிப்பாக பணத்துக்கு தட்டுப்பாடு தான். ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றவுடன் அனைவருக்குமே பயம் தான். இது நல்ல முயற்சி தான்.
நிறைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தினமும் சம்பளம் வாங்குபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். காலப்போக்கில் இது மாறும், ஆனால் தற்போது அனைவருமே கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள்.
திரையரங்குகளில் மக்கள் வருகைக் குறைந்திருக்கிறது. இணையதளம் மூலமாக டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு படம் பார்க்க வருகிறார்கள். இதனால் பி மற்றும் சி சென்டர்களில் கொஞ்சம் வசூல் பாதிப்பு என்று சொல்கிறார்கள். நிறைய படங்கள் தங்களுடைய வெளியீட்டை மாற்றி அமைத்திருக்கிறார்கள். 'சென்னை 28 2' படமும் நவம்பர் 25ம் தேதியிலிருந்து ஒரு வாரம் தள்ளி வரலாமா என்று பேசி வருகிறோம்.
பணத்துக்கான பயத்தில் இருந்து மக்கள் வெளியே வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. ஒவ்வொரு இந்தியனுமே வரவேற்கத்தக்க ஒரு விஷயம் தான். கண்டிப்பாக பெரிய மாற்றம் தான். இனிமேல் பணமின்றி அனைத்துமே இணையம் மூலமாக பரிமாற்றம் நடக்கும். இனிமேல் க்ரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலமாகத் தான் நிறைய வாங்குவோம் என நினைக்கிறேன்.
உயிர் பலி செய்திகளைப் பார்க்கும் போது இப்படி மனிதாபிமானமின்றி இருக்கிறார்களே என்னும் போது தான் கஷ்டமாக இருக்கிறது. கண்டிப்பாக இது தூய்மையான இந்தியாவுக்குத் தான் வழிவகுக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.