

'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் இசையமைப்பாளரை இறுதி செய்யாமலேயே 5 பாடல்களை படமாக்கி முடித்துவிட்டார் கெளதம் மேனன்.
'அச்சம் என்பது மடமையடா' வெளியானதைத் தொடர்ந்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வில் கவனம் செலுத்தத் தொடங்கிவிருக்கிறார் கெளதம் மேனன்.
'அச்சம் என்பது மடமையடா' தாமதமானப் போதே, 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார் கெளதம் மேனன். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
தனுஷ், மேகா ஆகாஷ் இருவரும் நடித்து வரும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் ஆகியவற்றில் மிகவும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
இசையமைப்பாளர் குறித்து கெளதம் மேனன், "இப்படத்துக்கு இன்னும் இசையமைப்பாளர் முடிவாகவில்லை. ஆனால், 5 பாடல்களை நான் படமாக்கி முடித்துவிட்டேன். படத்தில் பாடல்கள் எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்ததால் அப்படியே படமாக்கிவிட்டேன். தனுஷும் என்னுடைய எண்ணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.
இசையமைப்பாளரை வித்தியாசமாக அறிவிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு போஸ்டர் அல்லது வெறும் அறிவிப்பாக இல்லாமல், ஒரு பாடலை வெளியிட்டு அதன் மூலமாக அறிவிக்கலாம் என்று எண்ணியிருக்கிறோம்.
இன்னும் ஒரு சில முக்கிய காட்சிகள் மட்டும் மும்பையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதனை முடித்து அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.