

நடிகர் சங்க வளாகத்தில் பொதுக்குழு நடைபெறும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்தார்.
லயோலா கல்லூரி பொதுக்குழுவுக்கான அனுமதியை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக காவல்துறை இணை ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து விஷால் அளித்த பேட்டியில், "நடிகர் சங்கப் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். லயோலா கல்லூரி வளாகத்தில் இல்லாமல் நடிகர் சங்க வளாகத்திலேயே நடைபெறும். இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ள பல்வேறு நடிகர்கள் வெளியூரிலிருந்து கிளம்பி வருகிறார்கள்.
நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி கிடைத்திருக்கிறது. இவ்விடத்தில் நடைபெற வேண்டும் என்று முன்பே முடிவு செய்தோம், சில காரணங்களால் நடத்த முடியவில்லை. எங்கள் வளாகத்தில் முதல் முறையாக பொதுக்குழு நடைபெறவிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. இப்பொதுக்குழுவில் மூத்த நடிகர்கள் பலருக்கும் விருது வழங்கி கெளரவிக்க இருக்கிறோம்.
கடந்த மார்ச் மாதம் ஒரு பொதுக்குழு, லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அங்கு தற்போது பொதுக்குழு நடத்தக் கூடாது என்று தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார்கள். எங்களுக்கும் அத்தகவல் வந்தது. யார் மிரட்டினார்கள், எதற்காக என்று யோசிப்பதற்கு எல்லாம் இப்போது நேரமில்லை. அனுமதி கிடைக்காத போது நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியதிருந்தது. எதற்காக அனுமதி மறுத்தார்கள் என்பது குறித்து பேச விரும்பவில்லை.
எங்களைத் தடுப்பதன் மூலம் எங்களை வலுவாக்கியே வருகிறார்கள். நாங்கள் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறோம். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அதற்காகதான் கடந்த ஒராண்டாக செயலாற்றி வருகிறோம். இந்த பொதுக்குழுவிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். எங்கள் நிலத்திலேயே பொதுக்குழு நடத்த, எங்களைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. லயோலா கல்லூரியில் பொதுக்குழு நடத்தவிடாமல் தடுத்த மர்மமான நபருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் விஷால்.