Last Updated : 07 Nov, 2016 12:07 PM

Published : 07 Nov 2016 12:07 PM
Last Updated : 07 Nov 2016 12:07 PM

கமல் என்றொரு ‘ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்!’

கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாளை ஒட்டி, சமீபத்தில் 'இளமை புதுமை'

இணைப்பிதழில் வெளியான கட்டுரை இங்கே மறு பகிர்வாக...

தமிழ் சினிமாவில் ‘ஸ்டைல்’ என்றாலே பலருக்கும் ரஜினியின் பெயர்தான் நினைவில் வரும். நடிப்பு ரீதியில் ரஜினிக்கும் முன்பு சிவாஜி, எம்.ஆர். ராதா ஆகியோர் ஸ்டைலில் முக்கியமானவர்கள். ரஜினியின் சமகாலத்தில் கமல் நடிப்பில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் பல்வேறு ஸ்டைல்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்து அதன் மூலம் தமிழர்களின் வாழ்க்கையில் ஊடுருவியவர். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் பெரும்பாலான கல்லூரி மாணவிகளுக்குப் பிடித்தமான நடிகர் கமல்தான் என்பதற்கு அவர் தனது தோற்றத்தில் காட்டிய ஸ்டைல் முக்கியக் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் ‘அபூர்வ ராகம்’ காலத்தில் கமல் கதாநாயகனாக அறிமுகமானார். உடை, தோற்றத்தில் முந்தைய காலகட்டத்தின் நடிகர்களைவிட பெருமளவில் மாறுபட்டிருந்தாலும் அவரது ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் தொடங்கியது ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்திலிருந்துதான். கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்து ‘16 வயதினிலே’ படத்தையும் கிராமத்துப் பின்னணியில் இயக்கி, அதில் கமலை கோவணத்துடன் நடிக்கவும் வைத்த பாரதிராஜாவின் மூன்றாவது படம்தான் ‘சிவப்பு ரோஜாக்கள்’. தமிழ்த் திரைப்பட உலகைப் பொறுத்தவரை நம்பவே முடியாத வகையில் நவநாகரிகமாக எடுக்கப்பட்ட படம் அது. பெல்பாட்டம், கூலிங் கிளாஸ், தொங்கு மீசை என்று கமலின் தோற்றம் அன்றைய இளைஞர்களை (முக்கியமாக, இளம் பெண்களை) சொக்கவைத்தார் கமல். அந்த பெல்பாட்டத்துடன், கொடூரமான பார்வையை கூலிங் கிளாஸைத் தாண்டியும் வெளிப்படுத்தி மெதுவாக நடந்துவரும் கமலை மறக்க முடியுமா?

இந்த கெட்டப்பின் தொடர்ச்சிதான் ‘உல்லாசப் பறவைகள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘குரு’ போன்ற படங்கள். அதற்குப் பிறகான காலகட்டத்தில் ‘தெருவைக் கூட்டும் பெல்பாட்டம்’ என்று அந்த உடை கிண்டலடிக்கப்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளிலோ பெல்பாட்டத்தின் மீதான காதல் மீண்டும் திரும்பியிருக்கிறது. பெல்பாட்டத்தின் நவீன வடிவம்தானே பூட்கட்.

‘ராஜபார்வை’, ‘மூன்றாம் பிறை’, ‘டிக் டிக் டிக்’ காலகட்டத்தில் தோற்றம் சற்றே மாறுபடுகிறது. தொங்கு மீசையின் அளவு குறைகிறது. தொடையில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும் தெருவைக் கூட்டும் அளவுக்குக் கால் பகுதி இல்லை. அடங்கிய தொனியில் இருக்கும் ஒரு ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் என்றும் அதைச் சொல்லலாம். கமலின் கிளாஸிக்கான தோற்றங்களில் ‘மூன்றாம் பிறை’க்கும் ஒரு இடம் இருக்கிறது.

‘மூன்றம் பிறை’ தோற்றம் சிறு சிறு மாற்றங்களுடன் ‘சலங்கை ஒலி’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சட்டம்’, எனக்குள் ஒருவன்’, ‘காக்கிச்சட்டை’, ‘விக்ரம்’ என்று தொடர்ந்து வந்து ‘புன்னகை மன்னன்’ படத்தில் உச்சமடைகிறது. அதற்குப் பிறகு கமல் தோற்றத்தில் மிக முக்கியமான மாற்றம், அவரது அருமையான ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் ‘புஷ்பக் விமானம்’ (தமிழில்: பேசும் படம்), ‘நாயகன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற அவரது தோற்றம்தான். உச்ச நாயகனாக ஆன பிறகு மீசை இல்லாமல் கமல் முதன்முதலில் தோன்றியது இந்தப் படங்களில்தான். நீளம் குறைந்த, இறுக்கமான கைவைத்த சட்டையை, இன் செய்துகொண்டு ‘நாயக’னாக வரும் கமல் இப்போதும் புதுமையாகவே தெரிகிறார். அதே படத்தில் வயது ஏறுவதைக் காட்டும் விதத்தில் பல்வேறு தோற்றங்களுடன் வருவார். கடத்தல் எதிரிகளுடனான நட்புரீதியிலான சந்திப்புக்கு கோடு போட்ட கோட் அணிந்துகொண்டு வரும் தோற்றம் ரொம்பவும் ஸ்டைலாக இருக்கும். ‘தமிழ்நாட்டின் அல் பசினோ’ என்ற பட்டத்தை அவருக்குக் கொடுக்கும் அளவுக்குத் தமிழ் ரசிகர்களுக்கு அப்போது உலக சினிமா அறிவு இல்லாமல் போனதே என்பதை நினைத்து மனம் வேதனையுறுகிறது.

1988-ல் வெளியான ‘சத்யா’, கமலின் ரொம்பவும் ஸ்டைலிஷான ஸ்டேட்மெண்ட். தாடி வைத்துக் கொண்டும், புஜத்தோடு இறுக்கமாக மடித்த கையுடனும், கையில் காப்புடனும், ‘இன்’ செய்த தோற்றத்துடனும் கோபக்கார இளைஞனாக கமல் நடித்திருப்பார். 80-களின் இறுதியில் கமலின் அந்தத் தோற்றத்தால் ஈர்க்கப்படாத இளைஞர்களே இல்லையென்று சொல்லலாம். குக்கிராமங்கள்வரை ‘சத்யா’க்கள் உருவானார்கள். ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கமல் ரசிகராக வரும் இளமைக் கால சூர்யா, ‘சத்யா’ தோற்றத்துக்கு ஒரு டிரிப்யூட் செய்திருப்பார். அது, சூர்யாவின் டிரிப்யூட் மட்டுமல்ல, கௌதம் வாசுதேவ் மேனனுடையதும் கூட. அந்த அளவுக்கு ‘சத்யா’ தோற்றம் இன்றுவரை எல்லோரையும் ஈர்த்துவைத்திருக்கிறது.

‘சத்யா’ படத்துக்குப் பிறகு, அழுக்கான தோற்றத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட ‘புத்திசாலி’யாக கமல் நடித்திருக்கும் ‘குணா’வும் அழகுதான். குரங்குக் குல்லா, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு பின்னணியில் ‘உல்லாசமாய் வாழவே’ என்ற சந்திரபாபு பாடல் ஒலிக்க நடந்து வரும் கமல் அட்டகாசமாக இருப்பார்.

1993-ல் வெளியான ‘மகாநதி’ படத்தின் முற்பகுதியில் (சீவல் கம்பெனி முதலாளியாக) தனது கிளாஸிக் தோற்றத்தை கமல் ரீவிஸிட் செய்திருப்பார். சற்றே ‘மூன்றாம் பிறை’ கமலை அது நினைவுபடுத்துகிறது.

‘தேவர் மகன்’ படத்தில் ஃபங்க் வைத்துக்கொண்டு வந்தது, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’ படங்களில் போலீஸ் கட்டிங் செய்திருந்தது எல்லாமே தொண்ணூறுகளின் இளைஞர்களையும் ஆட்கொண்டது. இப்படியாக மூன்று பத்தாண்டுகளிலும் தனது தாக்கத்தைக் கமல் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டுதான் இருந்தார். கடைசியாக, ‘விருமாண்டி’யில் அவர் வைத்த கிருதா மீசையின் தாக்கத்தை இன்றும் கிராமத்துச் சண்டியர்களிடமும் போலீஸ்காரர்களிடமும் காண முடிகிறது.

கமல் தமிழ் சினிமாவை எடுக்கும் விதத்தில் மட்டும் புதுமைகள் புரிந்தவர் அல்ல, அதில் தான் தோன்றும் விதத்திலும் புதுமைகள் புரிந்திருக்கிறார். தனது ஸ்டைலிஷான தோற்றத்தால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலே இளைஞர் களை அவர் கவர்ந்துவந்திருக்கிறார். ஆகவேதான், இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ‘ஷெவாலியே விருது’க்கும் முன்பே தமிழ் சினிமாவில் இளமைக்கும் புதுமைக்குமான ‘ஷெவாலியே’ விருதை ரசிகர்கள் அவருக்கு எப்போதோ வழங்கிவிட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x