ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 4 படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 4 படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்
Updated on
1 min read

'ரூபாய் நோட்டு' தட்டுப்பாட்டால் பல்வேறு படங்கள் தங்களின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைத்திருக்கிறது.

கடவுள் இருக்கான் குமாரு

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் முதலில் நவம்பர் 10-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் நவம்பர் 17-ம் தேதிக்கு தங்களுடைய வெளியீட்டை மாற்றியது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் தள்ளி, நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ராஜேஷ் "இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சினைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். 'கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதல்முறை" என்று தெரிவித்துள்ளார்.

சைத்தான்

ப்ரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டணி நடித்திருக்கும் 'சைத்தான்' முதலில் நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது. அதற்குப் பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால், வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. தற்போது டிசம்பர் 2-ம் தேதிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

கவலை வேண்டாம்

டி.கே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். தீபாவளி வெளியீடாக இருந்த இப்படம், நவம்பர் வெளியீடாக மாற்றியது. ஆனால் ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சரியான வெளியீட்டுத் தேதிக்கு காத்திருந்தது. தற்போது பல்வேறு படங்கள் பின்வாங்கியதால், நவம்பர் 24-ம் தேதி தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தி சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. முதலில் நவம்பர் 18 வெளியீடாக இருந்தது. ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடால் வெளியீட்டுத் தேதியை மாற்றிவிட்டது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவில்லை. இது குறித்து விஷால் "கத்தி சண்டை வெளியீட்டு தேதி இன்னும் இரண்டு நாட்களில் இறுதி செய்யப்படும். ஆனால் கண்டிப்பாக இந்த மாதம் வெளியீடு இல்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in