

திரையுலகில் டப்பிங், உடை அலங்காரம் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் பெண் கலைஞர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் என, நடிகை ரோகிணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 5-வது உலகத் திரைப்பட விழா திருப்பூர் டைமண்ட் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-ம் நிகழ்வில் நடிகை ரோகிணி பேசியதாவது: இதுபோன்ற உலகத் திரைப்பட விழாக்களைப் பார்த்தபோதுதான், மிகச்சிறந்த திரைப்படங்கள் இருப் பதை அறிந்து கொள்ள முடிந்தது.
மலையாளத் திரை உலகம், மிகச் சிறந்த திரைப்படங்களைக் கொடுத்து வந்தது. அங்கு மோகன்லால், திலகன் உள்ளிட்ட மிகச்சிறந்த பிறவிக் கலைஞர்கள் இருக்கிறார்கள். மலையாளத் திரைப்படங்கள் மூலமாக தான் இயல்பான, உண்மையான நடிப்பை நான் அறிந்துகொண்டேன்.
அங்கு நடித்துவிட்டு தமிழ்ச் சினிமாவுக்கு வந்தால், இதன் தன்மையே வேறு மாதிரி இருந்தது. இங்கு நடிப்பு என்பது உணர்ச் சியைக் கூட்டி, இயல்பு மீறியதாக அதிக சப்தத்துடன் இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று காட்டினர்.
உலக அளவில் மிகச்சிறந்த திரைப்படங்கள் என்பவை டப்பிங் இல்லாமல், இயல்பான வசனங்கள், இசையுடன் வெளி வருகின்றன. அவைதான், படம் பார்ப்பவர்களுக்கு முழுமையான உணர்வை, கதையின் அழுத்தத்தை உணர்த்தக் கூடியவையாக இருக்கின்றன.
ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி, அவர்களின் ரசனையைக் குறை சொல்லி அதற்கேற்ப படம் எடுப்பதாகச் சொல்வது சரியல்ல. தமிழ்த் திரையுலகில் அண்மைக் காலமாக காக்கா முட்டை, குற்றம் கடிதல், தங்க மீன்கள் ஆகிய விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல திரைப்படங் கள் வந்துள்ளன. அவற்றுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். எனவே, ரசிகர்கள் மீது குறை சொல்ல முடியாது.
உலக அளவில் சிறந்த திரைப் படங்களைப் பார்க்கும்போதுதான், தமிழகத்தில் ஒருவிதமான ரசனைப் போக்குக்கு ரசிகர்களை வழிப்படுத்துகிறார்கள் என்பதை உணர முடிகிறது. ரசிகர்களின் இயல்பான ரசனை உணர்வுக்கு ஏற்ற, நல்ல திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும்.
தமிழ்த் திரையுலகில் முதல் ரிக்கார்டிங் கலைஞராக இயக்குநர் நாகராஜின் மனைவி லட்சுமி செயல்பட்டிருக்கிறார். இப்போதும்கூட, பெண் கலைஞர்கள் என்றால் டப்பிங், உடை அலங்காரம் போன்ற துறைகளுக்குத் தான் என நினைக்கின்றனர். ஆனால், திரையுலகில் பல்வேறு துறைகளிலும் பெண் கலைஞர்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். உலகத் திரைப்பட விழாக்கள், ரசிகர்களின் ரசனைக்கான ஜன்னல்களாக சிறந்த பங்களிப்பைச் செய்கின்றன என்றார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இந்நிகழ்ச்சியை, தமுஎகச திரை இயக்கப் பொறுப்பாளர் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா ஒருங்கிணைத்தார். தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.