

சமூக வலைத்தளங்களில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ரசிகர்களிடையே அவ்வப்போது 'கெத்துப் போர்' நடப்பது உண்டு.
'தல' ரசிகர்களின் ஆதிக்கம் அதிகமா? 'தளபதி' ரசிகர்களின் ஆதிக்கம் அதிகமா? என்ற முக்கியத்துவம் வாய்ந்த சந்தேகத்துக்கு இணையத்தில் இரு அணிகளாகப் பிரிந்து நடத்தப்படும் அக்கப்போர் என்றும் இதில் தொடர்பில்லாத ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு.
இதன் உச்சக்கட்டம்தான் இன்று ட்விட்டரில் நடந்துள்ள ஹேஷ்டேக் (#) போட்டி. அஜித்தின் 'வீரம்' படமா அல்லது நடிகர் விஜய் விருது வாங்கயிருக்கும் 'விஜய் விருதுகள்' விழாவா என்று விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே கெத்துப் போர் நடந்து வருகிறது.
'விஜய் விருதுகள்' நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு 'சிறந்த பொழுதுபோக்கு நடிகர்' விருது வழங்கப்பட்டது. ஜூலை 20-ம் தேதி 'விஜய் விருதுகள்' நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. ஆனால், அதில் விஜய் விருது வாங்கிக்கொண்டு பேசியது எதுவுமே ஒளிபரப்பவில்லை. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒளிபரப்பாகும் என்று அறிவித்தார்கள்.
விஜய் டி.வியில் 'விஜய் விருதுகள்' நிகழ்ச்சிக்கு போட்டியாக கடந்த வாரம் சன் டி.வியில் 'சிங்கம் 2' திரைப்படம் ஒளிபரப்பட்டது. இந்த வாரம் ஒளிபரப்பாகும் 'விஜய் நிகழ்ச்சி'க்கு போட்டியாக சன் டி.வியில் அஜித்தின் 'வீரம்' படம் ஒளிபரப்பட்டு வருகிறது.
இதனால் நடிகர் விஜய் வாங்கவிருக்கும் 'சிறந்த பொழுதுப்போக்கு நடிகர்' விருதா அல்லது அஜித் நடிப்பில் ஒளிபரப்படும் 'வீரம்' திரைப்படமா என்று அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே யார் கெத்து என்ற போட்டி நிலவி வருகிறது.
இன்று காலை முதலே ட்விட்டர் தளத்தில் #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உடனே #VIJAYFavHeroForever என்ற ஹாஷ்டேக் உருவாகி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இரண்டு ஹேஷ்டேக்குகளுமே ஒன்றின் மீது ஒன்றாக மாறி மாறி ட்ரெண்ட்டாகி வருகிறது. இன்று டி.வி TRP எனப்படும் எந்த டி.வி அதிகமாக பார்க்கப்பட்டது என்ற கணக்கில் நாளை சன் டி.வியா, விஜய் டி.வியா என்ற போட்டியை விட ஜெயிக்க இருப்பது அஜித்தா, விஜய்யா என்பது தெரியவரும்.