தவறு செய்யாத 80% மக்களை அரசு வாட்டுவது ஏன்?- நடிகர் விஜய் வேதனை

தவறு செய்யாத 80% மக்களை அரசு வாட்டுவது ஏன்?- நடிகர் விஜய் வேதனை
Updated on
1 min read

"நம் நாட்டில் 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா? அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?" என்று மத்திய அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.

மேலும், சாதாரண பொதுமக்கள் அவதிக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டி அவர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் தமிழ் திரையுலகிலும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய். அப்போது, "மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு உண்மையில் நல்ல விஷயம்தான். கண்டிப்பாக நம் நாட்டுக்கு தேவையான, துணிச்சலான வரவேற்கத்தக்க ஒரு முயற்சிதான். கண்டிப்பாக நம்முடைய பொருளாதாரத்தை வளர்த்துவிடும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அந்த நோக்கத்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கக் கூடாது என்பதை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பசிக்கு சாப்பிட முடியாமல், மருந்து வாங்க முடியாமல், வெளியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப முடியாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். தினமும் கிடைக்கும் 500, 1000-ஐ வைத்துக் கொண்டு சிறு சிறு வியாபாரிகள் முதற்கொண்டு பாதிக்கப்படுகிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. பேத்தி திருமணத்திற்காக இடத்தை விற்று வந்த பணம் செல்லாது என்றதால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போயிருக்கிறார்கள். மருத்துவமனையில் ஒரு சிறு குழந்தை இறந்து போயிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

20% பேர் பணக்காரர்கள் இருப்பார்களா, அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?

இதுவரை யாருமே பண்ணாத, பண்ண யோசிக்காத ஒரு முயற்சிதான் இது. பிரச்சினைக்கு தீர்வாக ஒரு சட்டம் போடுகிறார்கள். அதை அமல்படுத்தும்போது, என்ன பிரச்சினைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கான வழிகளை முன்பே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து

இன்றைக்கு இப்பிரச்சினை கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். 4 நாட்களாக இருந்த சூழல் இப்போதில்லை. கிராமங்களில் இன்னும் அந்த கஷ்டம் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மத்திய அரசு தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்" என்று விஜய் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in