

சீற்றம் கொண்டு வெகுண்டெழும் ஒருவனின் மிரட்டலே இந்த ‘மிரள்’. பொறியியலாளரான பரத் தன்னுடைய மனைவி வாணிபோஜன் மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் வாணிபோஜனுக்கு வரும் கனவு, அவர்களின் அத்தனை நிம்மதியையும் குலைத்துப்போடுகிறது. அமானுஷயமான விஷயங்கள் தன்னை துரத்துவதாக எண்ணி மனரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட, இதற்கான தீர்வை நோக்கி ஓடுகிறார் பரத்.
குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிப்பட்டால் துர்ஷ்டசக்தி தூரம் ஓடிவிடும் என்றெண்ணி மாமானாரான கே.எஸ்.ரவிக்குமாரின் ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் பரத் வாழ்க்கையில் விடாது கருப்பாக சோகம் தொடர, இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை எதிர்பார்க்காத திருப்பத்துடன் சொல்லும் படம்தான் ‘மிரள்’.
இயக்குநர் சக்திவேல் ‘மிரள்’ வழி பார்வையாளர்களை மிரட்டிவிட எத்தனித்து அதில் படத்தின் முதல்பாதியின் சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முதல் பாதி முழுவதும் ஏன் நடக்கிறது? யார் இப்படி செய்வது? - இப்படி பல கேள்விகள் ஒருபுறம் துரத்திக்கொண்டிருக்க, திடீரென நடக்கும் சம்பவங்களும், காட்சிகளும் சீட்டியிலிருந்து நம்ம ஜெர்க் ஆக வைக்கின்றன. அந்த வகையில் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் தன்னுள் தக்கவைத்து ஒரு ஹாரர் படத்துக்கு பக்காவாக பொருந்துகிறது.
குறிப்பாக, க்ளிஷேவான காதல் காட்சிகள், அதற்கான பாடல்கள் என்றில்லாமல், முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார் இயக்குநர். ஆனால், இழுத்துச்சென்ற பார்வையாளர்களை தக்கவைக்க விடாப்பிடியாக அவர் போராடியிருப்பது சற்று சோதனை.
காரணம், படம் இரண்டாம் பாதியில் நுழையும்போது கரும்பாக இனிக்க, சிறிது நேரத்தில் தெகட்டிவிடுகிறது. ‘எவ்வளவு நேரத்துக்கு தான் சஸ்பென்ஸ் வைச்சிருப்பீங்க’ என்ற கேள்வி எழ, அந்த சஸ்பென்ஸ் உடைபடும் நேரத்தில் கூடவே பார்வையாளர்களின் கணிப்பும், எதிர்பார்ப்பும் உடைந்துவிடுகிறது. இத்தனை பிரச்சினைக்குமாக சொல்லப்பட்ட காரணம் அத்தனை கன்வைன்ஸிங் ஆக இல்லாததும், தூண்டப்பட்ட ஆர்வத்துக்கான தீனியின் போதாமையும் ஏமாற்றத்தை கொடுக்கின்றன.
படம் முடிந்ததும் முதல் பாதியின் காட்சிகளை யோசித்துப் பார்த்தால், 'இதெல்லாம் இந்தக் கதைக்கு எதுக்கு?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. தேவையான திணிப்புகளாகவே அவை எஞ்சி நிற்கின்றன. கூடவே, படத்தின் நீளத்தைக் கூட்டவும், பார்வையாளர்களுக்கு பயத்தை விதைக்கவுமே அவை பயன்படுத்தியிருப்பது திரைக்கதையின் பலவீனம். இறுதியில் லாஜிக் ஓட்டைகளை அடைக்க படக்குழு போராடியிருப்பது பரிதாபம். அதைத் தாண்டியும் ஓட்டைகள் வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றன.
திரைக்குள்ளிருக்கும் பதைபதைப்பை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் எஸ்.என்.பிரசாத்தின் இசை பெரும் பங்கு வகிக்கிறது. சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவில் இருள் காட்சிகளில் ரம்மியம் தோற்றிக்கொள்கிறது. தொழில்நுட்ப ரீதியாக படம் பெரிய அளவில் பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை. க்ளோசப் ஷாட்களில் வாணி போஜனின் பயம் கலந்த நடிப்பும், முகத்தில் படரும் பதற்றமும் கதாபாத்திரத்திற்கான நியாயத்தை சேர்க்கின்றன. தலையில் அடித்துக்கொண்டு அழும் காட்சியில் நடிப்பில் ஓவர் டோஸ் ஆகிவிட்ட உணர்வு. இரண்டாம் பாதியில் ஒற்றை ஆளாக அங்கும் இங்கும் ஓடுவது, இயலாமையில் அழுது தவிப்பது என பரத்தின் நடிப்பு மொத்த படத்துக்குமான பலம். ராஜ்குமாருக்கு படத்தில் வெயிட்டான ரோல். கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்து மாமானாராக கவனம் ஈர்க்கிறார்.
ஒட்டுமொத்தமாக விறுவிறுப்பையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மையக்கதையில் தடுமாறியிருப்பது படத்துக்கான முழுமையிலிருந்து விடுபட்டு நிற்கிறது. காட்சிகளின் மிரட்டல் ஓரளவுக்கு என்றாலும் முழுமையை தருவது பலமான மையக்கரு தானே?!