

சென்னை: சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்கள் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதை திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி விமர்சித்துள்ளார்.
பருவமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால் பணிகள், மின்சார துறை சார்பில் கேபிள் அமைக்கும் பணிகள், குடிநீர் வாரியம் சார்பில் கழிவு நீர் வடிகால் பணிகள் என பல்வேறு சேவைத் துறைகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை இயக்குநர் சீனு ராமசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். ஓட்டொடு மொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.