

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‘அனல் மேலே பனித்துளி’. கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். வரும் 18-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் ஆதவ் கண்ணதாசன் நாயகனாக நடித்திருக்கிறார். படம் பற்றி ஆண்ட்ரியாவிடம் பேசினோம்.
‘அனல் மேலே பனித்துளி’ என்ன மாதிரியான கதை?
ஆதவ் என் நண்பர். அவர்தான் இந்தக் கதையைகேட்கச் சொன்னார். ஒரு பெண்ணைப் பற்றிய கதைங்கறதால இதில் நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். இதில், மதி என்கிற கேரக்டர்ல நடிக்கிறேன். சிறு நகரத்தில் இருந்து சென்னைக்கு கனவுகளுடன் வரும்அவருடைய வாழ்க்கை, நல்லா போய்க் கொண்டிருக்கும்போது, பாலியல் வன்முறை சம்பவம் நடக்குது. அதில்முடங்கிடாம என்ன செய்றார் என்பதுதான் கதை.
இந்தப் படம் உண்மைச் சம்பவக் கதையா?
இல்லை. இது சென்சிட்டிவான கதை. அதை சரியா கொடுக்கணும். ‘‘இதுபோன்ற சீரியஸான படங்களை எடுக்கும்போது, ரொம்ப கவனமா இருக்கணும்’’னு வெற்றிமாறன் சொல்வார். ‘‘ரொமான்ஸ் காமெடி எடுத்துஅது சரியா போகலைன்னா பரவாயில்லை. அதுமாதிரி நிறைய படங்கள் அடுத்தும் வரும். ஆனால், இதுமாதிரி படங்கள் தப்பா போச்சுன்னா, மத்தவங்கஇதுபோன்ற கதைகளைப் படமாக்க யோசிப்பாங்க’’ என்று சொல்வார். அதனால கவனமா எடுத்திருக்கோம். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்.
இதை ஓடிடி-யில் ரிலீஸ் பண்ன என்ன காரணம்?
இந்தப் படத்தை 2020-ல ஆரம்பிச்சோம். தியேட்டருக்கு என்றுதான் எடுத்தோம். பிறகு கரோனா வந்தது. அப்ப தியேட்டர்கள் திறக்கப்படலை. அதனால, ஓடிடி-யில ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு எடுத்தோம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள் இப்ப அதிகமா வருது.. எப்படி பார்க்கிறீங்க?
நல்ல விஷயம்தானே. இப்ப இந்தப் படம் மாதிரி கதைகளை, ஹீரோயின்தான் பண்ண முடியும். ஒரு ஹீரோ பண்ண முடியாது. அதனால, இதுபோன்ற கதைகள் அதிகம் வரணும். சொல்லப்படணும்னு நினைக்கிறேன்.
அதிகமா மாடர்ன் கேரக்டர்களில் கவனம் செலுத்தறீங்களே?
நான் ஆங்கிலோ இந்திய பெண் அப்படிங்கறதால, அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்குத்தான் நான் ‘செட்’ ஆவேன்னு டைரக்டர்களே முடிவு பண்ணிடறாங்க. மலையாளத்துல ‘அன்னாயும் ரசூலும்’ படத்தில்கிராமத்து கேரக்டர்ல நடிச்சிருந்தேன். எல்லோருக்கும் அந்த கேரக்டர் பிடிச்சிருந்தது. ‘வட சென்னை’ படத்துலயும் நான்மாடர்்னா பண்ணலை. இயக்குநர்கள்தான் அதை முடிவு பண்ணணும்.