Published : 01 Jul 2014 12:00 AM
Last Updated : 01 Jul 2014 12:00 AM

திரை விமர்சனம்: சைவம்

விசாலமான வீடுகளைப் போலவே பெரிய குடும்பங்களுக்கும் பெயர்பெற்றது செட்டிநாட்டு நகரத்தார் வாழ்க்கை. ஆனால் நகரத்தார் குடும்பங்கள் இன்று கூட்டுக் குடும்பம் எனும் அரிய பொக்கிஷத்தை இழந்து நிற்கின்றன. என்றாலும் செட்டிநாடு அன்பு, பாசம், உறவுகளின் அருமை ஆகியவற்றைப் பெரிதாக நினைப்பதும், உறவுகளுக்காக நிறைய விட்டுக் கொடுப்பதுமான மண் வாசனையை இழந்து விடவில்லை. அந்த மண் வாசனையுடன் வந்திருக்கும் படம்தான் இயக்குநர் விஜய்யின் சைவம்.

செட்டிநாட்டின் ஒரு பகுதியான கோட்டையூரில் வசித்துவரும் கதிரேசன் (நாசர்) என்ற பெரியவரின் குடும்பத்தினர் பல இடங்களில் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் விடுமுறைக்காகச் சொந்த ஊரில் கூடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த சந்தோஷத்தில் மொத்தக் குடும்பமும் திளைக்கிறது.

கோயில், குளம், கம்மாய் என்று சந்தோஷமாக நாட்கள் செல்லும்போது சில அசம்பாவிதங்களும் நடக்கின்றன. கதிரேசனின் பேத்தி தமிழ்ச் செல்வியின் (சாரா) ஆடையில் தீ பிடித்துவிடுகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.

அத்தனை பிரச்சினைகளுக்கும் சாமிக்குச் செய்யாமல் விட்ட நேர்த்திக் கடன்தான் காரணம் என்று நம்புகிறார்கள். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். பலி கொடுக்கப்பட வேண்டிய அந்தச் சேவல் தொலைந்துபோகிறது. சேவல் கிடைத்தால்தான் குடும்பத்தின் மகிழ்ச்சி திரும்பும் என்ற சூழ்நிலையில் அந்தச் சேவல் கிடைத்ததா? அமைதியிழந்து தவித்த உறவுகள் இறுதியில் என்ன செய்தார்கள்?

வணிகப் படங்களுக்கான சமரசம் எதுவும் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் விஜய். விளையாட்டு, சண்டை, காதல் ஆகியவற்றை இயல்பாகச் சொல்கிறார். குழந்தைகள், விடலைச் சிறுவர்கள், பதின் பருவத்தினர் ஆகியோரை அவரவர் இயல்பில் நடமாட விட்டிருக்கிறார். ஆனால், தமிழ்ச் செல்வி பாத்திரத்தை மட்டும் குழந்தைத் தனத்தை மீறிய விதத்தில் சித்தரித்திருக்கிறார். குழந்தை தமிழ், கோவிலில் தன் சித்தியை அம்மா எனக் கூப்பிட்டு அவரை சங்கடத்திலிருந்து காப்பாற்றுவது, உணர்வுபூர்வமாக இருந்தாலும், குழந்தைத் தன்மையை மீறிய செயலாகவே இருக்கிறது.

தமிழ்ச் செல்வியைக் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்துப் போவதற்கான காரணத்தை அழுத்தமாகச் சொல்லவில்லை. சேவலைத் தேடும்போது ஏற்படும் பரபரப்பு சேவலைப் பலிகொடுக்கப் பூசாரி கத்தியை ஓங்கும்போது ஏற்படவில்லை.

படத்தின் ஓட்டம் சீரற்ற தன்மை கொண்டிருக்கிறது. சேவலைத் தேடும் போது வரும் சண்டைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஆனால் சேவல் தேடு படலம் மிக நீளம். காவல் நிலையம் சென்று சேவலை காணவில்லை என்று புகார் கொடுப்பது பொறுமையைச் சோதிக்கிறது. காவல் நிலைய ஆய்வாளரின் பாத்திரம் நன்றாக உள்ளது. ஷண்முகராஜா வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன.

படத்தின் நீளம் 121 நிமிடங்கள்தான். ஆனாலும் படம் ரொம்ப நீளமாக இருப்பதாகத் தோன்றுகிறது. காட்சிகள் தனித்தனி யாகப் பார்க்க அழகாக இருக்கின்றன. ஆனால் ஒரே விதமாக இருப்பதால் அடுத்தடுத்துப் பார்க்கும்போது பொறுமையைச் சோதிக்கின்றன.

செட்டிநாட்டு வீட்டைக் காட்சிப்படுத்திய விதம் அந்த வீட்டில் உலவும் உணர்வைக் கொடுக்கிறது. தலைப்பில் பச்சை நிறத்தைப் பயன்படுத்தியிருப்பது, ஆரம்பக் காட்சியையும் இறுதிக் காட்சியையும் ஒருங்கிணைத்திருப்பது ஆகியவையும் பாராட்டத்தக்கவை.

படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். ஆனால் அந்த உணர்வு பார்வையாளர்களுக்கு வரவில்லை. பொருத்தமான நடிப்பு, உடை அமைப்பு, உடல் மொழி ஆகியவற்றை இயக்குநர் உறுதிசெய்திருக்கிறார். நாசர் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் மகன் லுத்ஃபுதீன் பாஷா துருதுருவென்று இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். பதின்பருவ நாயகியாக அறிமுகமாகியிருக்கும் துவாராவுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் அமையலாம். படத்தின் மையப் பாத்திரமாக நடித்துள்ள குழந்தை சாராவின் நடிப்பில் மிகுந்த பக்குவம் தெரிகிறது. வேலைக்காரராக வரும் ஜார்ஜ் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்களை விடப் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

அசைவத்துக்கு எதிரான படம், சைவத்தை ஆதரிக்கும் படம் என்ற முன் அனுமானங்கள் தேவையற்றவை. இது குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x