கார்த்தியின் 25-வது படம் ‘ஜப்பான்’ - இயக்குகிறார் ராஜு முருகன்

படக்குழுவினருடன் கார்த்திக்
படக்குழுவினருடன் கார்த்திக்
Updated on
2 min read

கார்த்தியின் 25-வது படத்துக்கு ‘ஜப்பான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜு முருகன் இயக்குகிறார்.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் முறையில் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை நிரூபித்து வரும் இயக்குநர் ராஜு முருகன். அப்படி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016-ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் 'ஜோக்கர்'. தற்போது மீண்டும் இதே கூட்டணி 'ஜப்பான்' மூலம் மீண்டும் இணைகிறது.

2007-ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து ஜனரஞ்சகமான, அதேநேரம் வித்தியாசமானப் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022ஆம் வருடத்தில் 3 அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ளார். 'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சுல்தான்' என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாயகனாகியிருக்கிறார். இது அவரது 25-வது படம் என்பது இந்தப் படத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். 'ஜப்பான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், 'கோலி சோடா', 'கடுகு' ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், 'ஜப்பான்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 2020-ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே கார்த்தி - ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்ய ஜிவி பிரகாஷ்குமார் மும்முரமாகத் தயாராகியுள்ளார்.

மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

'ஜப்பான்' படத்தின் பூஜை இன்று செவ்வாய்க்கிழமை (8.11.2022) காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். விரைவில் 'ஜப்பான்' படத்தின் முதல் பார்வையை (First Look) ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in