

இயக்குநர் ஷங்கர் ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.
பல ஆண்டுகளாக படமாக்க முயன்றும் முடியாமல் போன கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்தப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நாவலை படமாக்கும் முயற்சிகள் தீவிரமெடுத்துள்ளன. அந்த வகையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'வீரயுக வேள்பாரி' நாவலை படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதீத பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாகவும், இதன் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் சூர்யா ‘விருமன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ‘எழுத்தாளர் சு.வெங்கடேசுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் தொடங்கியிருக்கிறோம்’ என்று சூசகமாக தெரிவித்திருந்தார். படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
படம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாகவும், பான் இந்தியா முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.