

புதுமுக இயக்குநர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்துக்கு 'ஹர ஹர மஹாதேவகி' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் 'சி 3' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டிசம்பர் 16ம் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது.
இப்படங்களைத் தொடர்ந்து ஒரு படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். புதுமுக இயக்குநர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கவிருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பாலமுரளி இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இப்படத்தின் பூஜையோடு இன்று படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முதலிலேயே கைப்பற்றி இருக்கிறது.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 'ஹர ஹர மஹாதேவகி' வார்த்தையை படக்குழு, இப்படத்தின் பெயராக சூட்டியிருக்கிறது