

பிரேம்ஜி நடிப்பைத் தவிர, நிறைய இசையமைக்க வேண்டும் என 'அச்சமின்றி' இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்தார்.
விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அச்சமின்றி'. பிரேம்ஜி இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ராஜபாண்டி இயக்கியிருக்கும் இப்படத்தை வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் யுவன் பேசியது, "பிரேம்ஜிக்கு இசை நன்றாகவே வரும். ஏனென்றால் இசை எங்களுடைய ரத்தத்தில் இருக்கிறது என்று நான் பெருமையாகச் சொல்வேன்.
அவர் எங்கேயும் சுடவேண்டாம், அவர் கையை வைத்தாலே இளையராஜா அப்பாவிடம் தான் வரும். எங்களுக்கு வேண்டுமென்றே காப்பியடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எங்களுடைய பசங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். தலைமுறை தலைமுறையாக பின் தொடரும் என நம்புகிறேன்.
பிரேம்ஜி நல்ல இசையமைப்பாளன் என்பது எனக்கு தெரியும். 'அறியாத வயசு' என்ற பாடலில் 3வது சரணத்தில் ஃப்லூட் இசை ஒன்று வரும். அதை ப்ரேம்ஜி தான் பண்ணினான். அவன் நடிப்பைத் தவிர நிறைய இசையமைக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏன் பிஸியான நடிகராக இருக்கிறான் என்று தெரியவில்லை. எனக்கு நிறைய நடிப்புக்கான வாய்ப்பு தான் வருகிறது என்று சொன்னான். நானும் எது வருகிறதோ, அதை பண்ணு என்று சொல்லிவிட்டேன்" என்று பேசினார் யுவன்.