Published : 07 Nov 2022 04:45 AM
Last Updated : 07 Nov 2022 04:45 AM

“இயக்குநர்கள் சொல்வதையே நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறேன்” - நடிகர் யோகிபாபு

தூத்துக்குடி: இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் போட் என்ற திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவர் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர் குழுவினர் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் வெளியே வந்த நடிகர் யோகிபாபு கூறியதாவது: நான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நடிகர் ஷாருக்கானுடன் இரண்டா வது படத்தில் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர். இதற்காக இயக்குநர் அட்லிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானே திரைக்கதை வசனம் எழுதி, ஒரு படம் இயக்கவுள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். மறைந்த நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர். அப்துல் கலாம் போன்றவர்களுடன் அதிகம் பயணித்தவர். அதனால் அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். எனக்கு கருத்து சொல்லத் தெரியாது. இயக்குநர்கள் என்ன சொல்லித் தருகிறார்களோ அதைத்தான் நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறேன்.

நான் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன். ஆனால் மண்டேலா போன்ற படங்கள் எனது முகபாவனைக்கு ஏற்றாற்போல் இருந்ததால் அந்த படத்தில் எனக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது. அதுபோல் தற்போது நடித்து வரும் போட் படமும் அப்படித் தான். நான் கதாநாயகனாக நடித்தாலும், காமெடியனாக நடித்தாலும் பொதுமக்களும், ரசிகர்களும் ஒரே கோணத்தில் தான் என்னை பார்க்கின்றனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x