

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் அடுத்து 'லத்தி' என்ற படம் வெளியாகவுள்ளது. வினோத்குமார் என்ற புதுமுக இயக்குநர் இதை இயக்க, நாயகியாக சுனைனா நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதில் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள விஷால், இதை முடித்த பின் 'துப்பறிவாளன் 2' இயக்கி நடிக்கவுள்ளார்.
இதனிடையே குடும்பத்துடன் காசிக்குச் சென்றிருந்த விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
விஷால் தனது ட்வீட்டில், "அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருப்பதாக உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் ரீ-ட்வீட் செய்துவருகின்றனர். இதனால் விஷாலின் பதிவு கவனம் பெற்றுள்ளது.