

> நடிகர் விஜய் இப்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் என 4 வில்லன்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருத்விராஜ் கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக பிரபல மலையாள ஹீரோ, நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
> தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம், ‘வாத்தி’. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகிறது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக சக்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்தப் படத்தின் வேலைகள் முடியாததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. அதை மறுத்துள்ள படக்குழு, டிசம்பர் 2ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
> பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி. இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவரும் இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இருவரும் தங்கள் திருமணம் பற்றி பேசத் தயாரில்லை என்றும் ஆனால், அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டதாகவும் இந்தி சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.