

'காக்கி சட்டை' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 'ரஜினி முருகன்' படத்தில் ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காக்கி சட்டை' படத்தை இயக்கி வருகிறார் துரை.செந்தில்குமார். தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்குநர் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படத்தில் ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக நடிக்க இருக்கிறார். மதுரையில் சுற்றி நடக்கும் கதை என்பதால் முழுப்படப்பிடிப்பும் அங்கேயே நடத்த இருக்கிறார்கள்.
இரண்டு கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. தற்போது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'அஞ்சான்' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவிடம், 'ரஜினி முருகன்' நாயகி வேடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பலமான கூட்டணியோடு உருவானால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளப்போவது நிச்சயம் என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.