

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு (70) இந்த ஆண்டின் இந்திய திரை ஆளுமைக்கான நூற்றாண்டு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறும் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தகவல், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிருபர்களிடம் கூறும்போது, "சர்வதேச திரைப்பட விழாவுக்காக 88 நாடுகளைச் சேர்ந்த 1032 திரைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டு 192 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகச்சிறந்த பாடகர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறைக்கு அவர் சேவையாற்றி வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தியில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரது சேவையை பாராட்டி கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு இந்த ஆண்டின் இந்திய திரை ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கப்படும்" என்றார் அவர்.
பின்னணி பாடகர் மட்டுமன்றி பல்வேறு திரைப்படங்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றுள்ளார். அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.