தணிக்கைக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள்: படைப்பாளிகளுக்கு எஸ்.வி.சேகர் யோசனை

தணிக்கைக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள்: படைப்பாளிகளுக்கு எஸ்.வி.சேகர் யோசனை
Updated on
2 min read

படத்தின் தணிக்கை பணிகளுக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள் என நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.வி.சேகர் யோசனை தெரிவித்துள்ளார்.

நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய் ரத்தினம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'திட்டிவாசல்'. பிரதாப் முரளி இயக்கியிருக்கும் இப்படத்தை கே.3 சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களை வெளியிட, தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் எஸ்.வி.சேகர் பேசியது, "இப்படத்தில் நடித்துள்ள மகேந்திரன் என்னை அழைத்ததால் இங்கே நான் வந்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு மகேந்திரனைத் தெரியும். குழந்தை நட்சத்திரங்களில் ஒரே டேக்கில் நடித்து ஓகே வாங்குபவன் அவனாகவே இருப்பான். சிறுவயதில் நடித்தான் பிறகுகூட இடைவெளி விடாமல் ஏதாவது குறும்படம் என ஏதாவது ஒரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறான். சினிமாவை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை.அவன் திறமைக்கு இன்னும் உயரம் செல்வான்.

நான் ஒரு விஷயம் எப்போதும் சொல்வேன் வாழ்த்து வாங்கா விட்டாலும் சாபம் வாங்காமல் இருக்க வேண்டும். சினிமாவில் எல்லாருக்கும் எல்லாரும் போட்டிதான். ஆனால் யாரும் எதிரியில்லை.நாசரை எல்லாருக்கும் பிடிக்கும் என்றார்கள். அதனால்தான் அவர் யாராலும் நிரப்பமுடியாத இடத்தை நிரப்பியிருக்கிறார். எல்லாருக்கும் பிடித்தவராக இருப்பது சிரமம்.

படத்துக்காக செய்த செலவு படத்தில் தெரிய வேண்டும். இதில் தெரிகிறது. அதற்காக பாராட்டுக்கள்.இந்தத் தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொல்லும் போதே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தயவு செய்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு தணிக்கைக்குப் போகாதீர்கள். நான் சென்சார் போர்டு உறுப்பினர் என்கிற முறையில் புதிய தயாரிப்பாளர்களுக்கு சொல்லவேண்டிய விஷயம் இதுதான். அப்படிப் போகும் போது நேர நெருக்கடிக்கு ஆளாகும் போது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டி வரும். தணிக்கையில் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய நிலை வரும்.

சினிமா எடுப்பவர்கள் தணிக்கைக்குப் பயப்படக்கூடாது. நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும். சட்டப்படி தானே படம் எடுத்திருக்கிறோம்?, இது நம் தயாரிப்பு ,இதற்காக அவர்களிடம் கெஞ்சக் கூடாது. தைரியமாகப் பேச வேண்டும். உங்கள் படைப்பு மீது உங்களுக்கே நம்பிக்கை வேண்டும். இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லக் கூடாது. வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டுப் போனால் தேவையில்லாத பதற்றம் வரும்..

படத்தின் கதை விவாதம், படப்பிடிப்புக்கு எல்லாம் பல மாதங்கள் ஒதுக்குகிறீர்கள் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் மட்டும் உடனே வேண்டுமென்றால் எப்படி? தணிக்கைக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள். இன்று படமெடுப்பது சுலபம் .அதை வியாபாரம் செய்வது சிரமம். சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல்நாளே டிவிடி கொண்டு வரலாம். அதன் மூலம் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? இதைச் செய்யாததால் யாரோ சம்பாதிக்கிறார்கள்'' என்று பேசினார் எஸ்.வி.சேகர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in