

நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா சரத்குமார் கடுமையான குற்றச்சாட்டுகளோடு, ஊழல் குற்றச்சாட்டையும் தொடுத்திருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நிரந்தரமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நீக்கப்பட்டது குறித்து ராதிகா சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் "இரண்டு பெரிய நடிகர்களை நீக்கப் போகிறோம் என்பதை பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் எங்கேயுமே சொல்லவில்லை. நாங்கள் நீக்கப் போகிறோம் என்று சொல்லியிருந்தால், நானும் ஆதரவாளர்களுடன் சென்று கேள்வி கேட்டிருப்போம். ஏனென்றால் வெறும் 90 ஒட்டுகளில் மட்டுமே அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள்.
இருவரின் நீக்கத்துக்கு அனைவரும் ஒப்புதல் கொடுத்ததாக சொல்கிறீர்கள். யார் ஒப்புதல் கொடுத்தார்கள்?. கை தூக்கினார்களா?, வாக்களித்தார்களா? இல்லையென்றால் உங்களுடைய ஜால்ராக்கள் மட்டும் கைதட்டினார்களா? எதை வைத்து நீங்கள் ஒப்புதல் வாங்கினீர்கள்?. தற்காலிக நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, எப்படி நிரந்தர நீக்கம் செய்யமுடியும். நடிகர் சங்க சட்டத்திலேயே நிரந்தரமாக யாரையும் நீக்க முடியாது என இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா?
சட்டரீதியாக இந்த பொதுக்குழு செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டால், விழா செலவை எல்லாம் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதே போல நான் ஒரு நிரந்தர உறுப்பினர். பொதுக்குழு இடமாற்றம் தொடர்பாக எனக்கு எந்த தகவலுமே சொல்லவில்லை.
நடிகர் சங்கத்தைப் பற்றி எதுவும் பேசக் கூடாது என இருந்தேன். ஆனால், இன்று சிறுபிள்ளைத்தனமாக ஏதோ ஒரு பகையை மனதில் வைத்து செயல்படுவது போல எனக்குத் தெரிகிறது. அது மட்டுமே இதில் உண்மையாக இருக்கிறது. சரத்குமார் மற்றும் ராதாரவி நிறைய வருடங்கள் நடிகர் சங்கத்துக்காக உழைத்திருக்கிறார்கள். இந்த நடிகர் சங்கத்தின் நிலத்துக்கு பட்டா வாங்கி கொடுத்ததே சரத்குமார் தான். அந்த நிலத்தின் மீது இருந்த வங்கிக் கடனுக்க்காக பேசியவர் சரத்குமார். அப்படிப்பட்டவருக்கு நீங்கள் மரியாதைக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் ஊழல்
நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியதில் கணக்குகளை தவறாக காட்டியிருக்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மேக்கப் போட்டதற்கு சுமார் 40 லட்சம் வரை கணக்கில் காட்டியிருக்கிறீர்கள். கிரிக்கெட் விளையாட போகும் போது யார் மேக்கப் போட்டுக் கொண்டு விளையாடுவார்கள்?. அந்த மேக்கப் போட்டு விளையாடிய நடிகர்களின் விவரங்கள் எனக்கு வேண்டும். நிகழ்ச்சி மேலாண்மைக்கு ஒன்றரை கோடி கொடுத்ததாக சொல்லியிருக்கிறீர்கள். யார் அவர்கள்? எதற்காக கொடுத்தீர்கள் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்.
கார்த்தி மீது காட்டம்
சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நாங்கள் இருவரும் நிரந்தர அறங்காவலர்கள் என்று போட்டுக் கொண்டதாக பொதுக்குழுவில் கார்த்தி கூறியது ஒரு அப்பட்டமான பொய். இதற்கு கார்த்தி எனக்கு பதில் சொல்ல வேண்டும். இதைப் பற்றிய விவாதம் நடந்தது உண்மைதான். இது சரியாக வராது என்று திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இதற்கான ஆதாரம் நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சி விவரக் குறிப்புகள் புத்தகத்தில் இருக்கிறது. கார்த்தி அதைப் பார்க்கவில்லை என்றால், நான் காட்டத் தயார்" என்று ராதிகா தெரிவித்திருக்கிறார்