

இன்றைய இந்தியத் திரையுலகம், அனிமேஷன் படம் என்றாலே பல கோடிகள் அள்ளிக் கொடுத்து வெளிநாட்டு அனிமேஷன் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றது. இப்படிப்பட்ட சூழலில், மிக எளிமையான தொழில்நுட்ப முறையில், குறைந்த செலவில், 20 அனிமேஷன் கலைஞர்களைக் கொண்டு 'ரணதீரன்' டிரைலரை உருவாக்கி அசத்தியிருக்கிறது கோயம்பத்தூரைச் சேர்ந்த 'ரியல் வொர்க்ஸ் ஸ்டூடியோ'.
கடந்த 21-ஆம் தேதி யூ-டியூப்பில் பதிவேற்றப்பட்ட இந்த டிரைலர், இதுவரை 44,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ரியல் வொர்க்ஸ் ஸ்டூடியோவின் இயக்குநர் சிவபிரசாத் வேலாயுதம் கூறுகையில், "சிறந்த 'விஷ்வல் ஃப்பேக்ட்ஸ்' (Visual Effects) தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் இருந்தே நாம் சிறப்பான அனிமேஷன் வீடியோவை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தவே இந்த டிரைலரை உருவாக்கினோம். நாம்வெளிநாட்டு நிறுவனங்களைத் தேடி செல்லவேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த டிரைலரை, சமீபத்தில் வெளிவந்த ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு சமர்ப்பிப்பதாகவும், கோச்சடையான் படத்தைவிட தம்மால் திறம்பட அனிமேஷன் படம் உருவாக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
"ரசிகர்கள் கோச்சடையான் படத்தோடு இதனை தொடர்புபடுத்திக் கொள்ள எளிதாக இருக்கும் என்பதாலே இவ்வாறு உருவாக்கினோம். இது நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் படி" என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
3 நிமிடங்கள் 52 நொடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரை 800 மணிநேரத்தில் உருவாக்கியிருக்கிறது இந்த சாதனைக் குழு.
இந்நிறுவனத்தின் சாதனையைப் பாராட்டி பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.