

தமிழில் உருவாகவிருக்கும் 'குயின்' ரீமேக்கில், கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் கதையினை எந்த மொழியில் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதால் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலரும் போட்டியிட்டார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குகிறார்.
இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது.
'குயின்' ரீமேக்கில் நடிக்கவிருப்பது குறித்து தமன்னா, "'குயின்' படத்தைப் பார்த்தவுடன், இதன் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பது தான்.
அப்படத்தைப் பார்த்தவுடன் விடுதலையானது போல் உணர்ந்தேன். தற்போது இதன் ரீமேக்கில் நடிக்கவிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. ரேவதி மேடம் என்னை வைத்து இயக்குவது, எனக்கு ஏன் அவ்வளவு முக்கியமானது என்றால் ’தேவி' படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு அவர்தான் எனக்கு உந்துதல்.
சிறப்பான அணியில் இணைந்திருக்கிறேன். இப்படம் ரீமேக் என்பதைத் தாண்டி, தமிழ் உணர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார் தமன்னா.